இந்திய வீரர் விராட் கோலியின் ஆட்டத்தை தடுத்து நிறுத்துவது மிகவும் கடினம் என தென்னாப்பிரிக்க அணியின் ஆல்ரவுண்டர் மார்கோ யான்சென் தெரிவித்துள்ளார்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் ஒருநாள் போட்டி ராஞ்சியில் நேற்று (நவம்பர் 30) நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி அசத்தியது.
இந்தப் போட்டியில் இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ரோஹித் சர்மா அரைசதம் கடந்து ஆட்டமிழந்த நிலையில், விராட் கோலி சதம் விளாசி அசத்தினார். அவர் 120 பந்துகளில் 135 ரன்கள் (11 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள்) எடுத்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலிக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்த நிலையில், விராட் கோலி போன்ற உலகத் தரத்திலான வீரர்கள் நன்றாக ரன்கள் குவித்து விளையாடத் தொடங்கிவிட்டால், அவர்களை தடுத்து நிறுத்துவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது என தென்னாப்பிரிக்க அணியின் ஆல்ரவுண்டர் மார்கோ யான்சென் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: பந்துவீச்சாளர்கள் அவர்கள் வீசும் முதல் சில பந்துகளில் விக்கெட் எடுக்க வேண்டும். உலகத் தரத்திலான வீரர்களுக்கு எதிராக பந்துவீசும்போது, அவர்களை ஆட்டமிழக்கச் செய்வது மிகவும் கடினம். ஒரு பேட்டரை அவர் சந்திக்கும் முதல் 10 அல்லது 15 பந்துகளில் ஆட்டமிழக்கச் செய்ய வேண்டும் என எப்போதும் நினைப்பேன். ஆனால், முதல் 10, 15 பந்துகளில் விக்கெட்டினை இழக்காமல் அவர்கள் நிலைத்து நின்று ஆடத் தொடங்கிவிட்டால், அதன் பின் அவர்களது விக்கெட்டினை வீழ்த்துவது மிகவும் கடினம்.
விராட் கோலி விளையாடுவதைப் பார்ப்பதற்கு மிகவும் நன்றாக இருக்கும். அவர் விளையாடியதை தொலைக்காட்சி மூலமாகப் பார்த்து ரசித்திருக்கிறேன். ஆனால், தற்போது அவருக்கு எதிராக பந்துவீசி விக்கெட் எடுக்க முடியாதது ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. அதே சமயம், அவர் விளையாடியதைப் பார்ப்பதற்கு ஒருபுறம் மகிழ்ச்சியாகவும் இருந்தது. அவர் மிகவும் சிறப்பாக ஷாட்டுகளை தேர்ந்தெடுத்து விளையாடினார் என்றார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான நேற்றையப் போட்டியில் விராட் கோலி விளாசிய சதம், ஒருநாள் போட்டிகளில் அவரது 52-வது சதம் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.