தென்னாப்பிரிக்க பயிற்சியாளரிடம் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி கைகுலுக்க மறுத்து அவரை கடந்து சென்ற விடியோ இணையத்தில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
ராஞ்சியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகள் மோதிய முதலாவது போட்டியில் விராட் கோலி, ரோஹித் சர்மா, கேஎல் ராகுல் உள்ளிட்டோரின் அதிரடியான ஆட்டத்தால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
இந்தப் போட்டி முடிந்ததும் இரு அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் கைகுலுக்கிக் கொண்டனர். அப்போது விராட் கோலியும் தென்னாப்பிரிக்க தலைமைப் பயிற்சியாளர் சுக்ரி கான்ராடும் சந்தித்துக் கொண்டனர்.
விராட் கோலியிடம் சுக்ரி கான்ராட் கைகுலுக்க முயன்றார். ஆனால், விராட் கோலி அவரை கண்டுகொள்ளாதபடி, அடுத்துவந்த வீரர்களிடம் கைகுலுக்கிவிட்டு மேலே ஏறி சென்றார். இந்த விடியோ தற்போது இணையத்தில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.
முன்னதாக, இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் சமீபத்தில் நிறைவடைந்தது. இந்தத் தொடரை தென்னாப்பிரிக்க அணி 2-0 என முழுமையாகக் கைப்பற்றி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது.
டெஸ்ட் போட்டித் தொடரில் சொந்த மண்ணில் இதுவரை இல்லாத அளவுக்கு மோசமான தோல்வியை இந்திய அணி சந்தித்தது. தோல்விக்குப் பின்னர் பேசிய தென்னாப்பிரிக்க தலைமைப் பயிற்சியாளர் சுக்ரி கான்ராட், “இந்திய அணியை மண்டியிட வைக்க விரும்பினோம்” எனக் கூறிய கருத்து மிகப் பெரும் சர்ச்சையாக வெடித்தது.
மேலும், அவர் இனவெறியைத் தூண்டுவதாகவும் சுனில் கவாஸ்கர், அனில் கும்ப்ளே, பார்த்தீவ் பட்டேல், ஆகாஷ் சோப்ரா உள்ளிட்ட பலர் அவர் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக விராட் கோலி, தென்னாப்பிரிக்க பயிற்சியாளர் சுக்ரி கான்ராடிம் கைகுலுக்க மறுத்திருக்கலாம் என்று இணைய தளவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.