நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் வெற்றி பெறுவதற்கு மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு இன்னும் 319 ரன்கள் தேவைப்படுகின்றன.
நியூசிலாந்து - மேற்கிந்தியத் தீவுகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 231 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மேற்கிந்தியத் தீவுகள் 167 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இதனையடுத்து, 64 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 466 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
நியூசிலாந்து அணியில் இரண்டாவது இன்னிங்ஸில் ரச்சின் ரவீந்திரா 176 ரன்களும், கேப்டன் டாம் லாதம் 145 ரன்களும் எடுத்தனர். அவர்களைத் தொடர்ந்து, டெவான் கான்வே 37 ரன்கள் எடுத்தார்.
மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் கீமர் ரோச் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ஓஜா ஷீல்ட்ஸ் 2 விக்கெட்டுகளையும், ஜேடன் சீல்ஸ் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
சாய் ஹோப் சதம், ஜஸ்டின் கிரீவ்ஸ் அரைசதம்
இரண்டாவது இன்னிங்ஸில் 466 ரன்கள் எடுத்ததன் மூலம், மேற்கிந்தியத் தீவுகள் அணியைக் காட்டிலும் நியூசிலாந்து அணி 530 ரன்கள் முன்னிலை பெற்றது. இதனையடுத்து, மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு 531 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
531 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடி வரும் மேற்கிந்தியத் தீவுகள் அணி, நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் எடுத்துள்ளது.
அந்த அணியில் டாப் ஆர்டர் பேட்டர்களான ஜான் கேம்பெல் 15 ரன்கள், சந்தர்பால் 6 ரன்கள் மற்றும் அலிக் அதனாஸ் 5 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் ராஸ்டன் சேஸ் 4 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து, ஜோடி சேர்ந்த சாய் ஹோப் மற்றும் ஜஸ்டின் கிரீவ்ஸ் ஆட்டத்தின் பொறுப்பை உணர்ந்து விளையாடி வருகிறார்கள். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாய் ஹோப் சதம் விளாசியும், ஜஸ்டிஸ் கிரீவ்ஸ் அரைசதம் கடந்தும் விளையாடி வருகின்றனர். சாய் ஹோப் 183 பந்துகளில் 116 ரன்கள் (15 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்) எடுத்தும், ஜஸ்டின் கிரீவ்ஸ் 143 பந்துகளில் 55 ரன்கள் (6 பவுண்டரிகள்) எடுத்தும் களத்தில் உள்ளனர்.
நியூசிலாந்து தரப்பில் ஜேக்கோப் டஃபி 2 விக்கெட்டுகளையும், மாட் ஹென்றி மற்றும் மைக்கேல் பிரேஸ்வெல் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
ஆட்டத்தின் கடைசி நாளில் மேற்கிந்தியத் தீவுகளின் வெற்றிக்கு 319 ரன்களும், நியூசிலாந்தின் வெற்றிக்கு 6 விக்கெட்டுகளும் தேவைப்படுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.