தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஷுப்மன் கில் மீண்டும் இந்திய அணியில் இணையவுள்ளார்.
தென்னாப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் நிறைவடைந்துவிட்ட நிலையில், தற்போது இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின்போது, இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில்லுக்கு கழுத்துப் பகுதியில் காயம் ஏற்பட்டது. அதன் காரணமாக, அந்தப் போட்டியில் அவரால் தொடர்ந்து விளையாட முடியவில்லை. அதன் பின், இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்தும் அவர் விலகினார்.
காயம் காரணமாக ஷுப்மன் கில் ஒருநாள் தொடரிலிருந்தும் விலகியதால், அணியை கே.எல்.ராகுல் கேப்டனாக வழிநடத்தி வருகிறார்.
இந்த நிலையில், காயத்திலிருந்து ஷுப்மன் கில் குணமடைந்துவிட்டதால், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அவர் இந்திய அணியுடன் இணைவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக மருத்துவக் குழு தரப்பில் இந்திய அணி நிர்வாகத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் வெற்றிகரமாக அவரது காயத்திலிருந்து குணமடைந்துவிட்டார். அவர் தற்போது அனைத்து வடிவிலான போட்டிகளிலும் விளையாடும் அளவுக்கு முழு உடல்தகுதியுடன் இருக்கிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான டி20 தொடர் வருகிற டிசம்பர் 9 ஆம் தேதி முதல் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.