தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் துணைக் கேப்டன் ஷுப்மன் கில் ஃபார்முக்குத் திரும்புவார்களா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
தென்னாப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர் நிறைவடைந்துவிட்ட நிலையில், நாளை முதல் டி20 தொடர் தொடங்குகிறது.
இந்த நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் துணைக் கேப்டன் ஷுப்மன் கில் இருவரும் ஃபார்முக்குத் திரும்புவார்களா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
தனது அதிரடியான பேட்டிங் மூலம் டி20 போட்டிகளில் எதிரணிக்கு சவால் அளிப்பவர் சூர்யகுமார் யாதவ். டி20 போட்டிகளில் மிகவும் சிறப்பாக செயல்பட்டதைத் தொடர்ந்து, அவர் கடந்த 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் அந்த ஆண்டுக்கான ஐசிசியின் சிறந்த வீரர் விருதினை வென்றார். ஆனால், இந்த ஆண்டு அவருக்கு சிறப்பான ஆண்டாக அமையவில்லை.
இந்த ஆண்டு 15 டி20 போட்டிகளில் விளையாடிய சூர்யகுமார் யாதவ் 15.33 என்ற சராசரியுடன் வெறும் 184 ரன்கள் மட்டுமே குவித்தார். இந்த ஆண்டில் அவரது அதிகபட்ச ஸ்கோர் 47. ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 தொடர் சூர்யகுமார் யாதவுக்கு ஓரளவுக்கு நல்ல தொடராக அமைந்தது. அந்த தொடரில் நான்கு இன்னிங்ஸில் அவர் 84 ரன்கள் எடுத்தார்.
இந்திய அணிக்காக டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் வரிசையில் ரோஹித் சர்மா (4231 ரன்கள்), விராட் கோலிக்கு (4188 ரன்கள்) அடுத்தபடியாக சூர்யகுமார் யாதவ் மூன்றாவது இடத்தில் உள்ளார். இதுவரை இந்திய அணிக்காக 95 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள சூர்யகுமார் யாதவ் 2754 ரன்கள் எடுத்துள்ளார். சர்வதேச டி20 போட்டிகளில் 3000 ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனையைப் படைக்க அவருக்கு இன்னும் 247 ரன்களே தேவைப்படுகின்றன. சர்வதேச டி20 போட்டிகளில் சூர்யகுமார் யாதவ் 4 சதங்கள் மற்றும் 21 அரைசதங்கள் அடித்துள்ளார். அவரது அதிகபட்ச ஸ்கோர் 117.
இந்திய அணியின் துணைக் கேப்டனாக சில மாதங்களுக்கு முன்பு நியமிக்கப்பட்ட ஷுப்மன் கில், பெரிய அளவில் ரன்கள் ஏதும் எடுக்கவில்லை. இந்திய அணியின் துணைக் கேப்டனாக 12 போட்டிகளில் விளையாடியுள்ள ஷுப்மன் கில் வெறும் 259 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். இந்த 12 இன்னிங்ஸ்களில் 6 இன்னிங்ஸ்களில் 20 ரன்களுக்கும் குறைவாக எடுத்து ஆட்டமிழந்துள்ளார்.
இதுவரை இந்திய அணிக்காக 33 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ஷுப்மன் கில் 837 ரன்கள் குவித்துள்ளார். சர்வதேச டி20 போட்டிகளில் அவர் 1000 ரன்களை நெருங்கி வருகிறார். சர்வதேச டி20 போட்டிகளில் அவர் ஒரு சதம் மற்றும் 3 அரைசதங்கள் எடுத்துள்ளார். அவரது அதிகபட்ச ஸ்கோர் 126*.
அடுத்த ஆண்டு ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடர் இந்தியாவில் நடைபெறவுள்ளதால், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மீண்டும் ஃபார்முக்குத் திரும்பி, இந்திய அணியை இவர்கள் இருவரும் சிறப்பாக வழிநடத்த வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.