வாரணாசி கிரிக்கெட் திடலில் ‘திரிசூல’ வடிவ உயர்கோபுர மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ள சம்பவம் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.
இந்தியாவில் கிரிக்கெட்டை பின்தொடர மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே குவிந்து கிடக்கிறது. ஒவ்வொரு வீரருக்கும் தனித்தனி ரசிகர்கள் குழுக்கள், சர்வதேச போட்டிகளில் தொடங்கி உள்ளூர் போட்டிகள், ஐபிஎல் போட்டிகள், லீக் போட்டிகள், ஐசிசி தொடர்கள் என எதையும் விட்டுவைப்பது கிடையாது.
இந்தியாவில் பல்வேறு மதங்கள் பின்பற்றி வந்தாலும் அதற்கு எந்தவிதத்திலும் விட்டுக்கொடுக்காத வகையில் கிரிக்கெட்டும் ஒரு இடத்தைப் பிடித்திருக்கிறது.
இந்த நிலையில், கிரிக்கெட்டையும் ஹிந்து மதத்தையும் இணைக்கும் வகையில் உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் கட்டப்பட்டு வரும் புதிய கிரிக்கெட் திடல் ஒன்று சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் பழமை வாய்ந்த ஆன்மிக நகரான காசியில் (வாரணாசி) உள்ள கஞ்சாரி பகுதியில் ரூ. 450 கோடி மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுவரும் சர்வதேச கிரிக்கெட் திடல், அதன் வழக்கத்திற்கு மாறான தனித்துவமான வடிவமைப்பு மூலம் உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
30 ஏக்கர் பரப்பளவில் 30 ஆயிரம் பேர் அமரக்கூடிய வகையில், இந்தாண்டு டிசம்பரில் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழாவிற்குப் பின்னர் அடுத்தாண்டில் சர்வதேச போட்டிகள் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் திடலில் முக்கிய அடையாளமாகவும் உலகளவில் கவனம் பெற்ற விஷயமாக திரிசூல வடிவில் மின்விளக்கு கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கிரிக்கெட் திடல்களில் இரவில் போட்டிகளை நடத்துவதற்காக அமைக்கப்படும் மின்விளக்குக் கம்பங்கள், பொதுவாக நேராக அதன் தலைப்பகுதியில் சற்று உள்புறமாக சாய்ந்து இருக்கும்.
ஆனால், காசியில் அமையவிருக்கும் புதிய திடலில் ஹிந்துக்களின் புனித நகரமாகக் கருதப்படும் காசியின் ஆழமான கலாசாரம் மற்றும் ஆன்மிகத்தைக் குறிக்கும் வகையில் திரிசூல வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.
அதேபோல, முன்னதாக வெளியிடப்பட்ட வாரணாசி கிரிக்கெட் திடலுக்கான 3டி செயல் திட்டத்தில் வட்ட வடிவில், கடவுள் சிவபெருமானின் தலையில் இருக்கும் நிலா பிறை வடிவிலும், உடுக்கை வடிவிலும் அமைக்க திட்டமிப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.