அடுத்தாண்டு நடைபெறும் ஐபிஎல் போட்டியின் துவக்க நாள், இறுதிப் போட்டி பற்றிய தகவல்களை அணி நிர்வாகத்திடம் மட்டும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்(பிசிசிஐ) தெரிவித்துள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடர் அடுத்தாண்டு (2026) இந்தியாவிலும் பாகிஸ்தானுக்கான போட்டிகள் இலங்கையிலும் நடைபெறுகிறது. 2026-ம் ஆண்டுக்கான டி20 உலகக்கோப்பைத் தொடர் பிப்ரவரி 7 தொடங்கி மார்ச் 8 வரை நடைபெறவுள்ளது.
இந்தத் தொடர் முடிந்தவுடன் 19-வது ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், போட்டி தொடக்க நாள், இறுதிப்போட்டி குறித்த தகவல்களையும் அணி நிர்வாகத்தினரிடம் பிசிசிஐ கூறியுள்ளது.
இருப்பினும், போட்டி நடத்துவது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் ஐபிஎல் மற்றும் பிசிசிஐ தரப்பில் இருந்து வெளியாகவில்லை.
இந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியின் இன்று மதியம் நடைபெறும் ஏலத்துக்கு முன்னதாக ஐபிஎல் அணி நிர்வாகத்தினருடன் நேற்று பிசிசிஐ ஒரு ஆலோசனை கூட்டத்தை நடத்தியது. இந்தக் கூட்டத்தில் ஐபிஎல் நிர்வாக தலைமை அதிகாரி ஹேமங் அமீன், அடுத்தாண்டு ஐபிஎல் தொடக்க தேதி குறித்த தகவல்களை அணி நிர்வாகத்தினரிடம் மட்டும் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
அந்தக் கூட்டத்தில் உலகக் கோப்பைத் தொடர் முடிந்ததும் மார்ச் 26 ஆம் தேதி போட்டியைத் தொடங்கி மே 31 ஆம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. தொடரின் முதல் போட்டியில் பெங்களூரு அணி விளையாடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஐபிஎல் தொடரில் முதல் கோப்பையை வென்ற பெங்களூரு அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தில் நேரிட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பரிதாபமாக பலியாகினர். இதனால், பாதுகாப்பு காரணங்களுக்காக பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் திடலில் போட்டியை நடத்த முடியாது என ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்திருந்தது.
கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம், பெங்களூரு திடலில் போட்டியை நடத்துவதற்கான பாதுகாப்பு நெறிமுறைகளுடன் அனுமதி பெற்றிருந்தாலும், பாதுகாப்பு குறித்த சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
இதனால், பெங்களூருவில் போட்டிகள் நடத்தப்படுமா? என்பது குறித்த தகவல்கள் பின்னர் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.