மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டில் நியூசிலாந்து வீரர் டெவான் கான்வேவின் இரட்டைச்சதத்தால் அந்த அணி வலுவான நிலையில் முன்னிலை பெற்றுள்ளது.
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டி டிரா ஆன நிலையில் இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இவ்விரு அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசிப் போட்டி மௌண்ட் மாங்கானுவில் நேற்று காலை தொடங்கியது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி தொடக்க ஆட்டக்காரர்கள் டாம் லேதம் - டெவான் கான்வேவின் அசத்தலான ஆட்டத்தால் ஆட்ட நேர முடிவில் தொடக்க விக்கெட்டுக்கு 323 ரன்கள் குவித்த சாதனையும் படைத்தனர்.
லேதம் 137 ரன்களில் விக்கெட்டைப் பறிகொடுக்க முதல் நாளில் 178 ரன்களில் களத்தில் இருந்த டெவான் கான்வே அதே அதிரடியுடன் இரட்டைச்சதம் விளாசி அசத்தினார்.
தொடர்ந்து ஆடிய டெவான் கான்வே 227 ரன்கள் எடுத்து எல்பிடபிள்யூ ஆனார். டஃப்பி 17 ரன்களும், வில்லியம்சன் 31 ரன்களும், டேரில் மிட்செல் 11 ரன்களும், விக்கெட் கீப்பர் டாம் ப்ளெண்டல் 4 ரன்களும், பிலிப்ஸ் 29 ரன்களும், பௌல்க்ஸ் 1 ரன்னும் எடுத்து வெளியேறினர்.
155 ஓவர்களில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 575 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. ரச்சின் ரவீந்திரா 72 ரன்களுடனும், அஜாஸ் பட்டேல் 30 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
மேற்கிந்தியத் தீவுகள் அணித் தரப்பில் சீல்ஸ், பிலிப், ஜஸ்டின் க்ரீவ்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், ரோச், ரோஸ்டன் சேஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
பின்னர் தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, இரண்டாம் நாள் ஆட்டம் நேர முடிவில், 23 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி, 110 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர்கள் பிரண்டன் கிங் 55 ரன்களுடனும், ஜான் கேம்பல் 45 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.