இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த், காயத்தால் அவதிப்பட்டு வருவதால் தமிழகத்தைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் ஒருவருக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் அழைப்பு விடுத்துள்ளது.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிவரும் ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபியின் நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராபோர்டு மைதானத்தில் நடைபெற்றுவருகிறது.
இந்திய வீரர் ரிஷப் பந்த் 34 ரன்களில் விளையாடிக் கொண்டிருந்தபோது இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் வீசிய பந்து அவரின் வலது காலில் நேரடியாகத் தாக்கியது. வலியில் துடித்த ரிஷப் பந்த் ’ரிட்டையா்டு ஹா்ட்’ முறையில் வெளியேறிய நிலையில், அவர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்த நிலையில், 2-வது நாளில் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக திடீரென நொண்டிக்கொண்டே களத்துக்கு வந்த ரிஷப் பந்த் பேட்டிங் செய்தார்.
காலில் எலும்பு முறிவால் அவதிப்படும் ரிஷப் பந்த், தொடர்ச்சியாக விளையாடினால் காயத்தின் தன்மை அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அவர் 6 வாரங்கள் வரை ஓய்வெடுக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இந்தப் போட்டியில் அவர் முழுமையாக விளையாட வாய்ப்புள்ளது.
இதனைத் தொடர்ந்து கவுன்டி போட்டிகளில் விளையாடிய இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் இஷன் கிஷானுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என பிசிசிஐ-யின் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
அவரும் காயம் காரணமாக வாய்ப்பை மறுத்துள்ளார். இதனால், தமிழகத்தைச் சேர்ந்த விக்கெட் கீப்பரான ஜெகதீசனுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் அழைப்பு விடுத்திருப்பதாகத் பிசிசிஐ-யின் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.