டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுதவாக விராட் கோலி அறிவித்துள்ளதையடுத்து, ஒரு சகாப்தம் முடிவுக்கு வருவதாக கிரிக்கெட் உலகம் அவரை பாராட்டி வருகிறது.
இந்திய அணியின் ரன் மெஷின் என அழைக்கப்படும் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இன்று (மே 12) அறிவித்துள்ளார். அண்மையில், இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்த நிலையில், தற்போது விராட் கோலியும் ஓய்வை அறிவித்துள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற விராட் கோலி, தற்போது டெஸ்ட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெற்றுள்ளார். அவர் இனி ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடவுள்ளார். இந்திய அணிக்காக 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 9,230 ரன்கள் குவித்துள்ளார். அதில் 30 சதங்கள் அடங்கும். அவரது சராசரி 46.85 ஆக உள்ளது.
விராட் கோலி ஓய்வு - ஒரு சகாப்தத்தின் முடிவு
டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளதையடுத்து, ஒரு சகாப்தம் முடிவுக்கு வருவதாக கிரிக்கெட் வட்டாரங்கள் அவருக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
விராட் கோலியின் ஓய்வு தொடர்பாக பிசிசிஐ அதன் எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு சகாப்தம் முடிவுக்கு வருகிறது. ஆனால், அவரது இந்த சிறப்பான பயணம் எப்போதும் தொடரும். இந்திய அணியின் முன்னாள் டெஸ்ட் கேப்டன் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார் எனப் பதிவிடப்பட்டுள்ளது.
கௌதம் கம்பீர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: இந்திய அணிக்காக அவர் அளித்த பங்களிப்புகள் எப்போதும் கொண்டாடப்படும். சிங்கத்தைப் போன்ற அதீத ஆர்வம் கொண்டவர். உங்களை நாங்கள் கண்டிப்பாக மிஸ் செய்வோம் எனப் பதிவிட்டுள்ளார்.
ஐசிசி அதன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: இந்திய அணியின் சிறந்த வீரர்களில் ஒருவரான விராட் கோலி டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவருடைய சிறப்பான டெஸ்ட் பயணத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார் எனப் பதிவிட்டுள்ளது.
ஐசிசி தலைவர் ஜெய் ஷா எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: வாழ்த்துகள் விராட் கோலி. டெஸ்ட் வடிவிலான போட்டியில் சிறப்பாக செயல்பட்டு பல சாதனைகளை படைத்துள்ளீர்கள். ஒழுக்கம், உடல் தகுதி மற்றும் ஈடுபாடு போன்றவற்றுக்கு உதாரணமாக இருக்கிறீர்கள். லார்ட்ஸில் நீங்கள் பேசியது டெஸ்ட் போட்டியை எந்த அளவுக்கு நேசித்து விளையாடினீர்கள் என்பதைக் காட்டியது எனப் பதிவிட்டுள்ளார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அதன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: உங்களது நடை, உங்களுடைய ஷாட்டுகள், போட்டியில் உங்களது கொண்டாட்டங்கள் என அனைத்தையும் நாங்கள் மிஸ் செய்வோம். டெஸ்ட் போட்டிகளில் ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது. நீங்கள் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடியது மட்டுமின்றி, அதன் தரத்தையும் உயர்த்தியுள்ளீர்கள். உங்களது பங்களிப்புக்கு நன்றி எனப் பதிவிட்டுள்ளது.
ஏபி டி வில்லியர்ஸ் அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: மிகவும் சிறப்பான உங்களது டெஸ்ட் பயணத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளீர்கள். உங்களது திறமை, உறுதியான நம்பிக்கை எனக்கு எப்போதும் ஊக்கமளித்துள்ளது. உண்மையில் நீங்கள் லெஜண்ட். உங்களது எதிர்கால பயணத்துக்கு வாழ்த்துகள் எனப் பதிவிட்டுள்ளார்.
அஜிங்க்யா ரஹானே இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருப்பதாவது: உங்களுடன் இணைந்து இந்திய அணிக்காக விளையாடியது மிகவும் சிறப்பான பயணம். உங்களுடன் எனக்கு நிறைய நினைவுகள் கிடைத்துள்ளன. உங்களுடைய சிறப்பான டெஸ்ட் பயணத்துக்கு எனது வாழ்த்துகள் எனப் பதிவிட்டுள்ளார்.
விராட் கோலி ஓய்வு குறித்து யுவராஜ் சிங் பதிவிட்டுள்ளதாவது: உங்களுக்குள் இருக்கும் போராளியை டெஸ்ட் கிரிக்கெட் வெளிக்கொண்டு வந்தது. நீங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டுக்காக அனைத்தையும் கொடுத்துள்ளீர்கள். டெஸ்ட் போட்டிகளில் உங்களது சாதனைகளை நினைத்து பெருமையாக உள்ளது. தொடர்ந்து முன்னேறுங்கள் கிங் கோலி எனப் பதிவிட்டுள்ளார்.
விராட் கோலி ஓய்வு குறித்து புஜாரா தெரிவித்துள்ளதாவது: வாழ்த்துகள் விராட் கோலி. உங்களது டெஸ்ட் பயணம் குறித்து கண்டிப்பாக பெருமையடையலாம். உங்களுடன் இணைந்து இந்திய அணிக்காக விளையாடியது பெருமையாக உள்ளது என்றார்.
ஹர்பஜன் சிங் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: நாம் இருவரும் இணைந்து நீண்ட காலம் விளையாடியுள்ளோம். அவை மறக்க முடியாத அனுபவங்களைக் கொடுத்துள்ளன. டெஸ்ட் போட்டிகளில் நீங்கள் எண்ணற்ற சாதனைகளை படைத்துள்ளீர்கள். உங்களது எதிர்கால பயணத்துக்கு வாழ்த்துகள் எனப் பதிவிட்டுள்ளார்.
விராட் கோலி ஓய்வு குறித்து ஜஸ்பிரித் பும்ரா பதிவிட்டுள்ளதாவது: உங்களது கேப்டன்சியின் கீழ் அறிமுகமானது முதல் உங்களுடன் இணைந்து இந்திய அணியை சிறப்பான உயரத்துக்கு கொண்டு சென்றது வரை நிறைய சிறப்பான நினைவுகள் இருக்கின்றன. டெஸ்ட் கிரிக்கெட்டில் உங்களது சிறப்பான சாதனைகளுக்கு வாழ்த்துகள் எனப் பதிவிட்டுள்ளார்.
ரிஷப் பந்த் பதிவிட்டுள்ளதாவது: ஆட்டத்தின் மீது தீவிரம், அதீத காதல், உங்களது போராட்ட குணம் என உங்களால் முடிந்த அனைத்தையும் நீங்கள் கொடுத்துள்ளீர்கள். உங்களது எதிர்கால பயணத்துக்கு வாழ்த்துகள் எனப் பதிவிட்டுள்ளார்.
முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் பதிவிட்டுள்ளதாவது: வாழ்த்துகள் விராட் கோலி. உங்களது டெஸ்ட் கிரிக்கெட் பயணம் நம்பமுடியாத விதமாக இருக்கிறது. உங்களை நான் பார்த்த அன்றே, நீங்கள் மிகவும் சிறப்பான வீரர் என்பதை தெரிந்துகொண்டேன். டெஸ்ட் கிரிக்கெட்டினை நீங்கள் மேலும் மகிழ்ச்சிகரமானதாக மாற்றினீர்கள். ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக விளையாட எனது வாழ்த்துகள்.
இந்திய மகளிர் அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜூலன் கோஸ்வாமி விராட் கோலி குறித்து பதிவிட்டுள்ளதாவது: டெஸ்ட் போட்டிகளில் நீங்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டுள்ளீர்கள். அது வெறும் திறமை மட்டும் கிடையாது. கிரிக்கெட்டின் மீதான உங்களது அதீத ஆர்வம் அதில் தெரிந்தது. கிரிக்கெட்டில் நீங்கள் ஆதிக்கம் செலுத்தினீர்கள். 14 ஆண்டுகால அனுபவங்களை எங்களுக்கு அளித்துள்ளீர்கள். உங்களது எதிர்கால பயணத்துக்கு எனது வாழ்த்துகள் எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க: இந்திய டெஸ்ட் அணியில் சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு கிடைக்குமா?
சுரேஷ் ரெய்னா பதிவிட்டிருப்பதாவது:கிரிக்கெட்டின் மீதான அதீத ஆர்வம் மற்றும் உங்களது தலைமைப் பண்பு பலருக்கும் ஊக்கம் அளித்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து நீங்கள் ஓய்வு பெறுவதை பார்ப்பதற்கு வருத்தமாக இருக்கிறது. உங்களது சாதனைகள் நிலைத்து நிற்கும் எனப் பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.