இந்திய அணியின் பிளேயிங் லெவனில் வேகப் பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங்குக்கு தொடர்ச்சியாக வாய்ப்பு மறுக்கப்படுவதை என்ன கூறியும் நியாயப்படுத்த முடியாது என இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டி20 போட்டி மெல்போர்னில் நேற்று (அக்டோபர் 31) நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
இந்த நிலையில், இந்திய அணியின் பிளேயிங் லெவனில் அர்ஷ்தீப் சிங் இடம்பெறாதது ஆச்சரியமளிப்பதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அஸ்வின் அவரது யூடியூப் சேனலில் பேசியதாவது: இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஜஸ்பிரித் பும்ரா இடம்பெற்று விளையாடும் பட்சத்தில், பந்துவீச்சாளர்கள் வரிசையில் இரண்டாவது நபராக அர்ஷ்தீப் சிங் சேர்க்கப்பட வேண்டும். பிளேயிங் லெவனில் பும்ரா இல்லையெனில், பந்துவீச்சாளர்களில் அர்ஷ்தீப் சிங் முதல் வீரராக சேர்க்கப்பட வேண்டும். இந்திய அணியின் பிளேயிங் லெவனில் அர்ஷ்தீப் சிங் ஏன் இடம்பெறவில்லை என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஹர்ஷித் ராணா பேட்டிங்கில் நன்றாக செயல்பட்டார். ஆனால், விஷயம் ஹர்ஷித் ராணா நன்றாக விளையாடினாரா? இல்லையா? என்பது கிடையாது. அர்ஷ்தீப் சிங் ஏன் பிளேயிங் லெவனில் இடம்பெறவில்லை. கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பைத் தொடருக்குப் பிறகு, அர்ஷ்தீப் சிங் தொடர்ச்சியாக பல போட்டிகளில் பிளேயிங் லெவனில் இடம்பெறவில்லை.
ஆசிய கோப்பையில் அர்ஷ்தீப் சிங் சிறப்பாக பந்துவீசியதை பார்த்தோம். அவர் மிகவும் சிறந்த பந்துவீச்சாளர். அணியின் பிளேயிங் லெவனில் இடம்பெறுவதற்கு அவர் மிகவும் தகுதியான நபர். அவரை பிளேயிங் லெவனில் விளையாட வையுங்கள் என்றார்.
சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக 100 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வீரர் அர்ஷ்தீப் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.