ஐசிசியின் சிறந்த வீராங்கனை விருதுக்கான போட்டியாளர்களில் ஒருவராக இந்திய அணியின் துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஒவ்வொரு மாதமும் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைகளை தேர்ந்தெடுத்து அவர்களில் ஒருவருக்கு ஐசிசியின் சிறந்த வீரர்/ வீராங்கனை விருது வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் அக்டோபர் மாதத்துக்கான சிறந்த வீராங்கனை விருதுக்கான போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனா, தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் லாரா வோல்வர்ட் மற்றும் ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லே கார்டனர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
அண்மையில் நிறைவடைந்த ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் ஸ்மிருதி மந்தனா, தொடக்க வீராங்கனை பிரதிகா ராவலுடன் இணைந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். லீக் சுற்றில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 80 ரன்களும், இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 88 ரன்களும் எடுத்தார்.
நியூசிலாந்துக்கு எதிரான மிகவும் முக்கியமான போட்டியில் ஸ்மிருதி மந்தனா மற்றும் பிரதிகா ராவல் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த இணை முதல் விக்கெட்டுக்கு 212 ரன்கள் சேர்த்து சாதனை படைத்தது. அந்தப் போட்டியில் ஸ்மிருதி மந்தனா 109 ரன்கள் எடுத்து அசத்தினார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான உலகக் கோப்பை இறுதிப்போட்டியிலும் 45 ரன்கள் எடுத்து இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தித் தந்தார்.
தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் லாரா வோல்வர்ட்டுக்கும் இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் சிறப்பானதாக அமைந்தது. இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தபோதிலும், தென்னாப்பிரிக்க அணியை இறுதிப்போட்டி வரை அழைத்து வந்தார்.
இந்தியாவுக்கு எதிரான லீக் சுற்று போட்டியில் 70 ரன்கள் எடுத்து அசத்திய லாரா வோல்வர்ட், இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் அரைசதம் விளாசி அசத்தினார். இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் 169 ரன்கள் எடுத்து அசத்தினார் லாரா வோல்வர்ட். இந்தியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியிலும் அவர் சதம் விளாசி அசத்தினார்.
ஆஸ்திரேலிய அணியின் ஆஷ்லே கார்டனரும் இந்த உலகக் கோப்பைத் தொடரில் சிறப்பாக செயல்பட்டார். நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான போட்டிகளில் அவர் சதம் விளாசி அசத்தினார். பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்ட அவர் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இவர்கள் மூவரில் ஐசிசியின் அக்டோபர் மாதத்துக்கான சிறந்த வீராங்கனை விருதினை வெல்லப்போவது யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.