உலகக் கோப்பையை வென்று சொந்த ஊருக்குத் திரும்பிய இந்திய வீராங்கனைகள் அமன்ஜோத் கௌர் மற்றும் ஹர்லீன் தியோலுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அண்மையில் நிறைவடைந்தது. உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் உள்பட பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். மேலும், உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியை குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் இருவரும் நேரில் அழைத்துப் பாராட்டினர்.
இந்த நிலையில், உலகக் கோப்பையை வென்று சொந்த ஊரான பஞ்சாபுக்குத் திரும்பிய இந்திய வீராங்கனைகள் அமன்ஜோத் கௌர் மற்றும் ஹர்லீன் தியோலுக்கு அவர்களது உறவினர்கள் மற்றும் ஆளும் ஆத் ஆத்மியைச் சேர்ந்த தலைவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பஞ்சாபின் நிதித்துறை அமைச்சர் ஹர்பால் சிங் சீமா மற்றும் எம்.பி. குர்மீத் சிங் மீட் ஹேயர் இருவரும் விமான நிலையத்துக்கு வந்து வீராங்கனைகளை வரவேற்றனர். வீராங்கனைகள் இருவருக்கும் பொன்னாடைகள் போர்த்தி கௌரவிக்கப்பட்டது.
வீராங்கனைகளை வரவேற்க அவர்களது குடும்ப உறுப்பினர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் எனப் பலரும் விமான நிலையத்துக்கு வந்திருந்தனர்.
விமான நிலையம் வந்தடைந்த அமன் ஜோத்கௌர் பத்திரிகையாளர்களிடம் பேசியதாவது: இந்த வெற்றி ஒட்டுமொத்த இந்தியாவுக்கும், பஞ்சாபுக்குமானது. பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை அரையிறுதியில் வீழ்த்திய பிறகு நாங்கள் யாரும் அன்றிரவு தூங்கவில்லை. இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி கோப்பையை வென்ற நாளின் இரவும் நாங்கள் தூங்கவில்லை என்றார்.
விமான நிலையம் வந்தடைந்த ஹர்லீன் தியோல் பேசியதாவது: பெண்களுக்கு சுதந்திரம் மற்றும் வாய்ப்பு கொடுக்கப்பட்டால் அவர்களால் நாட்டுக்கு பெருமை சேர்க்க முடியும். என்னுடைய குடும்பம் எப்போதும் எனக்கு ஆதரவாக இருந்தது. அதனால், பெண் குழந்தைகள் சுதந்திரமாக இருக்க அவர்களது பெற்றோர்கள் அனுமதிக்க வேண்டும். அதேபோல, பெண் குழந்தைகள் கடினமாக உழைத்து வாழ்வில் முன்னேற வேண்டும் என்பதையும் கூறிக் கொள்கிறேன். நாங்கள் உலகக் கோப்பையை வெல்வோம் என்ற நம்பிக்கை இருந்தது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.