தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமான டெஸ்ட் தொடர் என வேகப் பந்துவீச்சாளர் முகமது சிராஜ் தெரிவித்துள்ளார்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற நவம்பர் 14 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் திடலில் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான பயிற்சியில் இரண்டு அணிகளின் வீரர்களும் ஈடுபட்டுள்ளனர்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியின் ஒரு பகுதியாக நடைபெறும் இந்த தொடர் இரண்டு அணிகளுக்குமே மிகவும் முக்கியமானதாகும். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை சமன் செய்ததன் மூலமும், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் வெற்றி பெற்றதன் மூலமும் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
இந்த நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமான டெஸ்ட் தொடர் என முகமது சிராஜ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: நடப்பு சாம்பியனான தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக விளையாடவுள்ள இந்த டெஸ்ட் தொடர், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் நாங்கள் விளையாடவுள்ள மிகவும் முக்கியமான டெஸ்ட் தொடராகும். பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை தென்னாப்பிரிக்க அணி 1-1 என்ற கணக்கில் டிரா செய்தது. இருப்பினும், எங்களால் இந்த டெஸ்ட் தொடரை வெல்ல முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் நாங்கள் மிகவும் நன்றாக செயல்பட்டோம். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றோம். தனிப்பட்ட விதத்தில் நான் மிகவும் நன்றாக பந்துவீசுவதாக உணர்கிறேன். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரிலும் அதனைத் தொடர விரும்புகிறேன். வலுவான அணிகளுக்கு எதிராக விளையாடுவது என்னுடைய பந்துவீச்சை மேம்படுத்திக் கொள்ள உதவும். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான சவாலுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் என்றார்.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் முகமது சிராஜ் மிகவும் அற்புதமாக பந்துவீசினார். அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய அவர், இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் 23 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார்.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராகவும் முகமது சிராஜ் அவரது அபார பந்துவீச்சைத் தொடர்ந்தார். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் சிராஜ் 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.