டி20 போட்டிகளில் அதிவேக சதம் விளாசிய இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையை வைபவ் சூர்யவன்ஷி படைத்துள்ளார்.
வளர்ந்து வரும் வீரர்களுக்கான ரைசிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் இன்றையப் போட்டியில் இந்தியா ஏ மற்றும் ஐக்கிய அரபு அமீரக அணிகள் விளையாடின.
இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா ஏ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 297 ரன்கள் எடுத்தது. இந்தப் போட்டியில் இந்தியா ஏ அணி 148 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தியா ஏ அணியில் அதிரடியாக விளையாடிய வைபவ் சூர்யவன்ஷி 32 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். இதன் மூலம், டி20 போட்டிகளில் அதிவேகமாக சதம் விளாசிய இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையை ரிஷப் பந்த்துடன் சூர்யவன்ஷி பகிர்ந்து கொண்டுள்ளார். இதற்கு முன்பாக, கடந்த 2018 ஆம் ஆண்டு ஹிமாசலுக்கு எதிரான போட்டியில் ரிஷப் பந்த் 32 பந்துகளில் சதம் விளாசியிருந்தார். அந்த சாதனையை தற்போது சூர்யவன்ஷி சமன் செய்துள்ளார்.
அதிரடியாக விளையாடிய வைபவ் சூர்யவன்ஷி சிக்ஸர் மழைப் பொழிந்தார். அவர் 42 பந்துகளில் 144 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 11 பவுண்டரிகள் மற்றும் 15 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய கேப்டன் ஜித்தேஷ் சர்மா 32 பந்துகளில் 87 ரன்கள் எடுத்தார். அதில் 8 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் அடங்கும்.
டி20 போட்டிகளில் அதிவேக சதம் விளாசிய இந்திய வீரர் என்ற சாதனையை இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா மற்றும் குஜராத்தின் உர்வில் படேல் இருவரும் இணைந்து பகிர்ந்து கொண்டுள்ளனர். இவர்கள் இருவரும் சையது முஸ்டாக் அலி கோப்பையில் 28 பந்துகளில் சதம் விளாசி அசத்தியுள்ளனர்.
கடந்த ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அறிமுக வீரராக களமிறங்கிய வைபவ் சூர்யவன்ஷி, குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் 35 பந்துகளில் சதம் விளாசி ஐபிஎல் தொடரில் அதிவேக சதம் விளாசிய இரண்டாவது வீரர் என்ற சாதனையைப் படைத்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: லக்னௌ அணிக்கு விற்கப்படுகிறாரா முகமது ஷமி?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.