ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தலைமைப் பயிற்சியாளராக குமார் சங்ககாராவை மீண்டும் ஒரு முறை அந்த அணி நிர்வாகம் நியமித்துள்ளது.
கடந்த ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் செயல்பட்டு வந்தார். பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து அவர் விலகியதையடுத்து, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தலைமைப் பயிற்சியாளராக மீண்டும் குமார் சங்ககாரா நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நிர்வாக இயக்குநராக குமார் சங்ககாரா செயல்பட்டு வருகிறார். அவர் கடந்த 2021 முதல் 2024 வரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டுள்ளார். தற்போது மீண்டும் ராஜஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளராக அவர் செயல்படவுள்ளார்.
இது தொடர்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் அதன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இயக்குநர் குமார் சங்ககாரா, அடுத்த ஐபிஎல் சீசனில் அணியின் தலைமைப் பயிற்சியாளராகவும் செயல்படவுள்ளார் எனப் பதிவிடப்பட்டுள்ளது.
கடந்த ஐபிஎல் சீசன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு சிறப்பானதாக அமையவில்லை. 14 போட்டிகளில் அந்த அணி வெறும் 4 வெற்றிகளை மட்டும் பெற்று புள்ளிப்பட்டியலில் 9-வது இடம் பிடித்தது.
அண்மையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் சஞ்சு சாம்சன் டிரேடிங் முறையில் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.