ஆஷஸ் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் விளையாடுவாரா என்பது குறித்து அலெக்ஸ் கேரி பேசியுள்ளார்.
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடர் வருகிற நவம்பர் 21 ஆம் தேதி தொடங்குகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டி பெர்த்தில் நடைபெறுகிறது.
காயம் காரணமாக முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் பாட் கம்மின்ஸ் விளையாடமாட்டார் எனக் கூறப்பட்டிருந்த நிலையில், ஜோஷ் ஹேசில்வுட்டும் முதல் டெஸ்ட்டில் விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதனால் ஆஸ்திரேலிய அணி அதன் சொந்த மண்ணில் பிரதான பந்துவீச்சாளர்கள் இரண்டு பேர் இல்லாமல் களமிறங்குகிறது. அணியை ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக வழிநடத்தவுள்ளார்.
இந்த நிலையில், ஆஷஸ் தொடரின் இரண்டாவது அல்லது மூன்றாவது டெஸ்ட்டில் பாட் கம்மின்ஸ் பிளேயிங் லெவனில் இடம்பெற்று விளையாடுவார் என அலெக்ஸ் கேரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: கேப்டன் பாட் கம்மின்ஸ் நேற்று பந்துவீச்சு பயிற்சியில் ஈடுபட்டதை பார்த்தேன். அவர் ஆஸ்திரேலிய அணிக்காக பந்துவீச தயாராக இருக்கிறார். சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்த அவர் தன்னை தயார் படுத்தி வருகிறார். அவர் எந்தவொரு சிரமமுமின்றி நன்றாக பந்துவீசுகிறார். இரண்டாவது அல்லது மூன்றாவது போட்டியில் அவர் அணியில் இடம்பெற்று விளையாடுவார் என்றார்.
பாட் கம்மின்ஸ் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் இருவரும் காயம் காரணமாக முதல் டெஸ்ட்டிலிருந்து விலகியுள்ளதால், மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஸ்காட் போலண்ட் இருவருடன் பிரண்டன் டக்கெட் அறிமுக வீரராக களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: ஆஷஸ் தொடருக்கான பந்துவீச்சு பயிற்சியில் மார்க் வுட்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.