ஐசிசி டி20 உலகக் கோப்பையின் முதல் சுற்றுப் போட்டிகளில் ஆஸ்திரேலிய வீரர் பாட் கம்மின்ஸ் காயம் காரணமாக விலகியுள்ளதாக அணித் தேர்வர் ஜார்ஜ் பெய்லி தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைத் தொடர் வருகிற பிப்ரவரி 7 ஆம் தேதி தொடங்கி மார்ச் 8 வரை நடைபெறவிருக்கிறது.
மொத்தம் 20 அணிகள் பங்கேற்றுள்ள இந்தத் தொடரின் 4 குழுக்களாக அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் தில்லி, சென்னை உள்பட 5 இடங்களில் மொத்தமாக 55 போட்டிகள் நடைபெறுகின்றன.
குரூப் ஏ-வில் இந்தியா, அமெரிக்கா, நமீபியா, பாகிஸ்தான், நெதர்லாந்து ஆகிய அணிகளும், குரூப் பி-யில் ஆஸ்திரேலியா, இலங்கை, அயர்லாந்து, ஜிம்பாப்வே, ஓமன் ஆகிய அணிகளும், குரூப் சி-யில் இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், வங்கதேசம், இத்தாலி, நேபாளம் ஆகிய அணிகளும், குரூப் டி பிரிவில் தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம், கனடா ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.
பிப்ரவரி 11 ஆம் தேதி இலங்கையின் கொழும்புவில் தொடங்கும் தங்கள் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அயர்லாந்து அணியை எதிர்கொள்கிறது.
இந்தத் தொடருக்கு முன்னதாக, பாகிஸ்தானில் நடைபெறும் ஜன. 29 ஆம் தேதி தொடங்கும் டி20 தொடரிலும் ஆஸ்திரேலிய அணி விளையாடவிருக்கிறது.
இந்த நிலையில், ஆஸ்திரேலிய அணியின் டெஸ்ட், ஒருநாள் கேப்டனும், முன்னணி வேகப்பந்து வீச்சாளருமான பாட் கம்மின்ஸ், டி20 உலகக் கோப்பை மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் இருந்து விலகுவதாகத் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் முழுமையாக விலகிய நிலையில், அவர் டி20 உலகக் கோப்பையில் முதலிரண்டு போட்டிகள் விளையாடமாட்டார் என்று அணித் தேர்வர் ஜார்ஜ் பெய்லி தெரிவித்துள்ளார். அவர் பிப்ரவரி 16 ஆம் தேதி நடைபெறும் இலங்கைக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக அணியினருடன் இணைவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பாட் கம்மின்ஸைத் தொடர்ந்து உலகக் கோப்பை அணியில் இடம்பெற்றுள்ள ஆஸ்திரேலிய வீரர்கள் நாதன் எல்லீஸ், டிம் டேவிட், க்ளென் மேக்ஸ்வெல், ஜோஸ் ஹேசில்வுட் உள்ளிட்டோருக்கும் ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.