பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை ஆசாத் காஷ்மீர் என பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சனா மிர் பேசிய விவகாரம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகளிர் உலகக் கோப்பைத் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இந்தியா, பாகிஸ்தான் உள்பட மொத்தமாக 8 அணிகள் பங்கேற்றுள்ளன.
இந்தத் தொடரில் நேற்று(அக்.2) கொழும்புவில் வங்கதேசம் - பாகிஸ்தான் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வங்கதேச அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்தப் போட்டியின் போது வர்ணனை செய்து கொண்டிருந்த முன்னாள் பாகிஸ்தான் அணியின் கேப்டனான சானா மிர் பேசிய வார்த்தை தற்போது மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் இடையே எல்லைப்புறங்களில் பிரச்சினை தொடர்ந்து வருகிறது. மேலும், பாகிஸ்தான் பயங்கரவாதத் தாக்குதலுக்கு இந்தியாவும் தொடர் பதிலடி கொடுத்து வருகிறது.
இந்த நிலையில், இந்தியாவின் ஒரு அங்கமான காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமித்து வருகிறது. இதற்கு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்று அழைக்கப்படுகிறது.
ஆனால், நேற்றையப் போட்டியில் பாகிஸ்தான் வீராங்கனையான நட்டாலியா பெர்வைஸ் குறித்து பேசும்போது பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சானா மிர், “நட்டாலியா ஆசாத் காஷ்மீரில் இருந்து வந்தவர். அவர் லாகூரில் அதிகளவிலான நேரத்தை கிரிக்கெட்டுக்காக செலவிடுகிறார். அவர் கிரிக்கெட் விளையாட பெரும்பாலான நேரம் லாகூர் வரவேண்டியிருக்கும்” எனக் கூறியிருந்தார்.
இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்து ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், அவர் வேண்டுமே சர்ச்சையைத் தூண்ட வேண்டும் என்று இப்படி கூறியதாக ரசிகர்களும் கொத்தளித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக முற்றிலும் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ள சனா மிர், தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டு விளக்கமளித்துள்ளார்.
அந்தப் பதிவில், “சின்ன சின்ன விஷயங்கள் மிகவும் பெரியதாக்கப்படுகின்றன. விளையாட்டில் அரசியலைக் கலக்கக்கூடாது.
பாகிஸ்தானின் ஒரு குறிப்பிட்ட பகுதியிலிருந்து அவர் எதிர்கொண்ட சவால்களையும் அவரின் கிரிக்கெட்டுக்கான பயணத்தையும் எடுத்துக்காட்டுவதற்காக மட்டுமே கூறினேன். வீரர்கள் எங்கிருந்து வருகிறார்கள் என்பது குறித்து வர்ணனையாளர்களாக நாங்கள் செய்வதுதான்.
மற்ற பகுதிகளிலிருந்து வரும் இரண்டு வீராங்கனைகளுக்கும் செய்தேன். இதை தயவுசெய்து அதை அரசியலாக்காதீர்கள். என்னுடைய மனதில் எந்த தவறான எண்ணமும், யாருடைய உணர்வுகளையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.
கிரிக்கெட் ஸ்கோர் குறித்த விவரங்களை வெளியிட்டு முன்னணி தளத்தின் அடிப்படையில் மட்டுமே அவ்வாறு பேசியதாகவும் சனா தெரிவித்து அது தொடர்பான ஸ்க்ரீன் ஸாட் ஒன்றையும் இணைத்துள்ளார். இந்த விவகாரம் பெரும் பிரச்சினை ஆன நிலையில், தற்போது பாகிஸ்தான் நிர்வகிக்கும் காஷ்மீர் என அந்த இணையதளத்தில் மாற்றப்பட்டுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான ஆசியக் கோப்பைத் தொடர் விவகாரம் இன்னும் முடிவடையாத நிலையில், இந்தப் பிரச்சினை கிரிக்கெட் வட்டாரத்தில் மீண்டும் சர்ச்சைகளைத் தூண்டியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.