வெளியில் நடக்கும் விஷயங்களுக்கு கவனம் கொடுக்காமல் உலகக் கோப்பையை வெல்வதில் மட்டும் இந்திய அணி கவனம் செலுத்தி வருவதாக ஜெமிமா ரோட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார்.
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் கொழும்புவில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இந்திய அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இந்த நிலையில், மகளிர் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்காக கடின உழைப்பை வழங்கியவர்களுக்காக இந்திய அணி உலகக் கோப்பையை வெல்ல விரும்புவதாகவும், வெளியில் நடக்கும் விஷயங்களிலிருந்து ஒதுங்கியிருக்க வீராங்கனைகள் முயற்சி செய்து வருவதாகவும் இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜியோஹாட்ஸ்டாரில் அவர் பேசியதாவது: ஒரு நேரத்தில் ஒரு போட்டியில் மட்டுமே கவனம் செலுத்த விரும்புகிறோம். எங்களது ஆலோசனையின்போதும் ஆட்டத்தில் மட்டுமே முழுமையாக கவனம் செலுத்த வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கிறோம். ஏனெனில், இந்த உலகக் கோப்பை குறித்து வெளியில் எத்தனை விஷயங்கள் சென்று கொண்டிருக்கின்றன என்பது எங்களுக்குத் தெரியும்.
வெளியில் நடக்கும் விஷயங்களுக்கு கவனம் கொடுக்காமல், எங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்புகிறோம். இந்திய அணியில் உள்ள ஒவ்வொருவரும் சக வீராங்கனைகளின் வெற்றியை தங்களின் வெற்றியாகக் கருதி கொண்டாடுகிறோம். எங்களது இயல்பான இந்த குணம் அணியை வலுவாக வைத்துள்ளது.
இந்தியாவில் மகளிர் கிரிக்கெட்டின் வளர்ச்சி குறித்து பேச வேண்டுமென்றால், அணியில் நான் நுழைந்தபோது மிதாலி ராஜ், ஜூலன் கோஸ்வாமி போன்றோர் எனக்கு மூத்த வீராங்கனைகளாக இருந்தனர். தற்போது, ஹர்மன்பிரீத் மற்றும் ஸ்மிருதி போன்ற மூத்த வீராங்கனைகள் அணியில் உள்ளனர். இவர்கள் இருவரும் அணியை சிறப்பாக வழிநடத்துகிறார்கள். இந்தியாவில் மகளிர் கிரிக்கெட் வளரக் காரணமாக இருந்தவர்களுக்காக உலகக் கோப்பையை வெல்ல விரும்புகிறோம் என்றார் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.