இந்திய அணியின் வெற்றிக்கான ரகசியம் குறித்து கேப்டன் சூர்யகுமார் யாதவ் மனம் திறந்துள்ளார்.
இந்திய அணி கடந்த ஆண்டு ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்றது. இதன் மூலம், 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்த இந்திய அணியின் ஐசிசி கோப்பைக்கானத் தேடல் முடிவுக்கு வந்தது. அதன் பின், இந்திய அணி கடந்த பிப்ரவரியில் சாம்பியன்ஸ் டிராபியை வென்று அசத்தியது. அண்மையில், ஆசிய கோப்பையையும் வென்றது.
இந்த நிலையில், நாக் அவுட் போட்டிகளில் தோற்றுவிடுவோம் என்ற பயமின்றி தைரியமாக விளையாடுவதே இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணம் என அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: எங்களது ஆட்டத்தில் மாற்றத்தைக் கொண்டுவந்த கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நாங்கள் சாம்பியன்ஷிப் பட்டங்களை வெல்வதாக உணர்கிறேன். நாக் அவுட் போட்டியில் தோல்வியடைந்துவிடுமோ என்று சிந்திக்காமல், எங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். பயப்படாமல் போட்டியை எதிர்கொள்ளும் அணுகுமுறை அணியில் சிறப்பான சூழலை உருவாக்கியுள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு, வித்தியாசமாக ஏதேனும் செய்ய வேண்டும் என்பது குறித்து யோசித்தோம். சாம்பியன் பட்டம் வெல்ல வேண்டுமென்றால், வித்தியாசமாக விளையாட வேண்டியிருக்கும் என்பதை உணர்ந்தோம்.
கடந்த 2010-11 ஆம் ஆண்டுகளில் முதல் தர போட்டியில் அறிமுகமானது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அப்போது உள்ளூர் போட்டிகளில் ரோஹித் சர்மாவை அணியில் சந்தித்தேன். அதன் பின், மும்பை இந்தியன்ஸ் அணியில் அவரது தலைமையின் கீழ் விளையாடினேன். மும்பை அணியில் விளையாடியபோது, தலைமைப் பண்பு குறித்து ரோஹித் சர்மாவிடமிருந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன்.
ஆடுகளத்துக்கு உள்ளேயும், வெளியேயும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை அவரிடமிருந்து கற்றுக் கொண்டேன். டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா செயல்பட்டபோது, அழுத்தமான சூழல்களை திறம்பட கையாளும் உண்மையான ரோஹித் சர்மாவை பார்த்தேன் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.