இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு மேற்கிந்தியத் தீவுகள் 121 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி தில்லியில் உள்ள அருண் ஜெட்லி திடலில் நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 518 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்ய, மேற்கிந்தியத் தீவுகள் அணி அதன் முதல் இன்னிங்ஸில் 248 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம், மேற்கிந்தியத் தீவுகள் அணி ஃபாலோ ஆன் ஆகி இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடியது.
இந்தியாவைக் காட்டிலும் 270 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, ஜான் கேம்ப்பெல் மற்றும் சாய் ஹோப்பின் சதங்களால் இரண்டாவது இன்னிங்ஸில் 390 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதன் மூலம், மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தியாவைக் காட்டிலும் 120 ரன்கள் முன்னிலை பெற, 121 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
சிறப்பாக விளையாடிய ஜான் கேம்ப்பெல் 115 ரன்களும், சாய் ஹோப் 103 ரன்களும் எடுத்தனர். அவர்களைத் தொடர்ந்து, ஜஸ்டின் கிரீவ்ஸ் 50 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார்.
இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். முகமது சிராஜ் இரண்டு விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
121 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வரும் இந்திய அணி, நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 63 ரன்கள் எடுத்துள்ளது.
யஷஸ்வி ஜெய்ஸ்வால் 8 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கே.எல்.ராகுல் 25 ரன்களுடனும், சாய் சுதர்சன் 30 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
கடைசி நாளில் இந்திய அணியின் வெற்றிக்கு 58 ரன்களும், மேற்கிந்தியத் தீவுகளின் வெற்றிக்கு 9 விக்கெட்டுகளும் தேவைப்படுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.