சர்வதேச டி20 போட்டிகளில் அதிவேகமாக அரைசதம் விளாசிய மூன்றாவது வீரர் என்ற சாதனையை நமீபிய வீரர் ஜேன் ஃபிரைலிங்க் படைத்துள்ளார்.
ஜிம்பாப்வே மற்றும் நமீபியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் திடலில் இன்று (செப்டம்பர் 18) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நமீபியா பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.
3-வது அதிவேக அரைசதம்; 205 ரன்கள் இலக்கு!
முதலில் விளையாடிய நமீபியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 204 ரன்கள் எடுத்துள்ளது.
அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஜேன் ஃபிரைலிங்க் மற்றும் லோரன் ஸ்டீன்கம்ப் அணிக்கு அதிரடியான தொடக்கத்தைத் தந்தனர். அதிரடியாக விளையாடிய ஜேன் ஃபிரைலிங்க் 13 பந்துகளில் அரைசதம் விளாசி, சர்வதேச டி20 போட்டிகளில் அதிவேக அரைசதம் விளாசிய மூன்றாவது வீரர் என்ற சாதனையைப் படைத்தார். அதிரடியாக விளையாடிய அவர் 31 பந்துகளில் 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 8 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் அடங்கும்.
அவரைத் தொடர்ந்து, ரூபன் டிரம்பெல்மேன் 46 ரன்களும், அலெக்ஸாண்டர் 20 ரன்களும் எடுத்தனர். ஸேன் கிரீன் 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ஜிம்பாப்வே தரப்பில் கேப்டன் சிக்கந்தர் ராஸா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். வெலிங்டன் மஸகட்சா, பிளெஸ்ஸிங் முஸராபானி மற்றும் டினோடெண்டா மபோசா தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஜிம்பாப்வே அணி விளையாடி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.