ஒருநாள் போட்டிகளில் 3-வது அதிவேக சதம் விளாசி ஆஸ்திரேலிய வீராங்கனை பெத் மூனி சாதனை படைத்துள்ளார்.
ஆஸ்திரேலிய மகளிரணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியும், இரண்டாவது போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்றன.
தொடரைக் கைப்பற்றப் போவது யார் என்பதை தீர்மானிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி தில்லியில் உள்ள அருண் ஜெட்லி திடலில் இன்று (செப்டம்பர் 20) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடி வருகிறது.
ஆஸ்திரேலிய அணி 40 ஓவர்களில் 340 ரன்களைக் கடந்து அபாரமாக விளையாடி வருகிறது. அந்த அணியில் தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கிய அலிஸா ஹீலி 30 ரன்களும், ஜியார்ஜியா வோல் 81 ரன்களும் எடுத்து அணிக்கு வலுவான தொடக்கத்தைத் தந்தனர். அதன் பின், எல்லிஸ் பெர்ரி 68 ரன்கள் எடுத்தார்.
அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி சிறப்பாக விளையாடி வரும் பெத் மூனி 57 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். இதன் மூலம், ஒருநாள் போட்டிகளில் அதிவேக சதம் விளாசிய 3-வது வீராங்கனை என்ற சாதனையை பெத் மூனி படைத்தார். அதிரடியாக விளையாடி வரும் அவர் 120* ரன்களைக் கடந்து விளையாடி வருகிறார். அதில் 20 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.
மகளிர் ஒருநாள் போட்டிகளில் அதிவேக சதங்கள் அடித்த வீராங்கனைகள்
மெக் லேனிங் - 45 பந்துகளில், நியூசிலாந்துக்கு எதிராக, 2012
கேரன் ரால்டான் - 57 பந்துகளில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக, 2000
பெத் மூனி - 57 பந்துகளில், இந்தியாவுக்கு எதிராக, 2025
சோஃபி டிவைன் - 59 பந்துகளில், அயர்லாந்துக்கு எதிராக, 2018
சமாரி அத்தப்பத்து- 60 பந்துகளில், நியூசிலாந்துக்கு எதிராக, 2023
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.