இங்கிலாந்தைச் சேர்ந்த லெஜன்ட்ரி நடுவர் ஹரால்டு டிக்கி பேர்ட் செவ்வாய்க்கிழமை(செப்.23) காலமானார். அவருக்கு வயது 92.
கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான இங்கிலாந்தைச் சேர்ந்த நடுவர் டிக்கி பேர்ட் உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக காலமானார்.
இங்கிலாந்தின் யார்க்ஷயரின் பர்ன்ஸ்லே பகுதியில் 1933 ஆம் ஆண்டு ஏப்ரல் 19 ஆம் தேதி பிறந்தவரான இவர், 1956 முதல் 1965 வரை யார்க்ஷயர் மற்றும் லெய்செஸ்டர்ஷையர் அணிக்காக 93 முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்தப் போட்டிகளில் 3314 ரன்கள் குவித்துள்ளார். இதில், இரண்டு சதமும் அடங்கும்.
தன்னுடைய 32 வயதில் முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக முதல்தரப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். இதன் பிறகு, 1970 முதல் இங்கிலாந்தின் கிரிக்கெட் போட்டிகளுக்கு நடுவராகப் பணியாற்ற துவங்கினார்.
அப்போதைய காலகட்டத்தில் அந்தளவிற்கு நவீன தொழில்நுட்பங்கள் இல்லாதபோதும் துல்லியமான முடிவுகளைக் கொடுத்ததில் டிக்கி சிறப்பு பெற்றவர்.
20 ஆண்டுகளுக்கும் மேலாக நடுவராகப் பணியாற்றிய டிக்கி, 66 டெஸ்ட் மற்றும் 69 ஒருநாள் போட்டிகளும் அடங்கும். மேலும், ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரில் முதல் மூன்று இறுதிப் போட்டிகளுக்கு இவர் நடுவராகப் பணியாற்றிய பெருமையும் பெற்றுள்ளார். அதன்பின்னர், யார்க்ஷயர் கவுன்டி கிரிக்கெட் கிளப் தலைவராக 2014ல் பணியாற்றி உள்ளார்.
டிக்கி பேர்டின் மறைவுக்கு முன்னாள், இன்னாள் வீரர்கள் மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட கிரிக்கெட் வாரியங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
1996 ஆம் ஆண்டு லார்ட்ஸில் நடைபெற்ற இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் போட்டியில், டிக்கி பேர்ட் நடுவராகப் பணியாற்றிய கடைசி டெஸ்ட் போட்டியாகும். இந்தப் போட்டியில்தான் இந்திய அணியின் ஜாம்பவான்கள் சவுரவ் கங்குலி மற்றும் ராகுல் டிராவிட் இருவரும் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.