துப்பாக்கியால் சுடுவது போன்ற சைகை அரசியல் அல்ல; இதனை இந்திய கேப்டன்கள் தோனியும் விராட் கோலியும்கூட செய்துள்ளனர் என பாகிஸ்தான் வீரர் ஷாஹிப்ஸாதா ஃபர்ஹான் ஐசிசி விசாரணையில் தெரிவித்துள்ளார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் பரம எதிரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் தொடரில் மூன்றாவது முறையாக வருகிற 28 ஆம் தேதி இறுதிப்போட்டியில் மோதவிருக்கின்றன.
இருநாடுகளுக்கும் இடையேயான மோதல்கள், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை உள்ளிட்ட காரணங்களால், இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி அகா இருவரும் போட்டிக்கு முந்தைய பத்திரிகையாளர் சந்திப்பு, டாஸ் உள்ளிட்டவற்றிலும் லீக் சுற்று, சூப்பர் 4 சுற்று போட்டியின் முடிவிலும் கைகுலுக்கவில்லை.
மேலும் போட்டி முடிவடைந்த பின்னரும் இரு அணி வீரர்களும் கைக்குலுக்கும் சம்பிரதாயங்களும் நிகழவில்லை. இது ஒருபுறம் இருக்க இந்த ஆட்டத்தின் போது பாகிஸ்தான் வீரர்கள் நடந்து கொண்ட விதம் மிகுந்த சர்ச்சைக்குள்ளானது.
போட்டியின் போது பாகிஸ்தான் வீரர்கள் சர்ச்சைக்குரிய அரசியல் நோக்கம் கொண்ட சைகைகளைச் செய்தனர். பாகிஸ்தான் வீரர் ஷாஹிப்ஸாதா ஃபர்ஹான் அரைசதம் அடித்ததும் தனது கிரிக்கெட் பேட்டை துப்பாக்கி போன்று வைத்து ரசிகர்களை நோக்கி சுடுவதை போன்று சைகை காட்டினார்.
இதுதொடர்பான படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு விமர்சிக்கப்பட்டன. ஷாஹிப்ஸாதா ஃபர்ஹானின் இந்த செயல் விளையாட்டின் மாண்பை சீர்குலைக்கும் வகையில் இருந்ததாக இந்திய ரசிகர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.
அதனைத் தொடர்ந்து இந்திய அணி பேட்டிங் செய்த போது பாகிஸ்தான் பந்து வீச்சாளரான ஷாகீன் ஷா அப்ரிடி, ஷுப்மன் கில்லையும், ஹாரிஸ் ரௌஃப் அபிஷேக் சர்மாவையும் வம்புக்கு இழுத்தனர். களநடுவர் உடனடியாக தலையிட்டு இவர்களை விலக்கிவிட்டார்.
தொடர்ந்து ஹாரிஸ் ரௌஃப் எல்லைக்கோட்டுக்கு அருகே ஃபீல்டிங் செய்தபோது 0-6 என்ற சைகையையும், விமானம் ஒன்று மேலேழும்பி பின்னர் கீழே விழுந்து வெடித்துச் சிதறுவது போலவும் சைகை காட்டினார்.
கடந்த மே மாதம் நடந்த ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் ராணுவ மோதலில் பாகிஸ்தான் ராணுவம், 6 இந்திய போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்தியதாகத் தெரிவிப்பது போலவும் இருந்ததாக இந்திய ரசிகர் கொதித்தெழுந்தனர்.
இந்த சர்ச்சைக்கு மத்தியில் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ரௌஃப்பின் மனைவி முஸ்னா மசூத் மாலிக், தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவில், “ஆட்டத்தில் தோற்றாலும் போரில் வென்றேன்” என மீண்டும் பதிவிட்டு சர்ச்சையைக் கிளப்பினார்.
இந்தச் சர்ச்சையைத் தொடர்ந்து ஐசிசியின் விசாரணைக்கு முன்னர் ஷாஹிப்ஸாதா ஃபர்ஹான் மற்றும் ஹாரிஸ் இருவரும் ஆஜராகினர்.
இந்த விசாரணையில், “இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்கள் மஹேந்திர சிங் தோனி, விராட் கோலி இருவரும்கூட இதற்கு முன்னதாக துப்பாக்கியால் சுடுவது போன்று சைகை காட்டியுள்ளனர்.
ஒரு பதானாகவும், பாகிஸ்தானில் உள்ள கலாசாரத்தின்படி திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகளிலும் துப்பாக்கியால் சுடுவது வழக்கம்” என்றும் ஷாஹிப்ஸாதா ஃபர்ஹான் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், இந்த நடவடிக்கையால் ஷாஹிப்ஸாதா ஃபர்ஹான் மற்றும் ஹாரிஸ் ரௌஃப் இருவருக்கும் 50 முதல் 100 சதவிகிதம் வரை அபராதம் விதிக்கவும் அல்லது இறுதிப்போட்டி உள்பட மூன்று சர்வதேச போட்டிகள் வரை தடைவிதிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.