நியூஸிலாந்தை வென்றது வங்கதேசம்: சமநிலையில் ஒருநாள் தொடா்
நியூஸிலாந்துக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் வங்கதேசம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நியூஸிலாந்துக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் வங்கதேசம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை வெற்றி பெற்றது. இதையடுத்து 3 ஆட்டங்கள் கொண்ட தொடா் 1-1 என சமநிலை கண்டுள்ளது.
இந்த ஆட்டத்தில் முதலில் நியூஸிலாந்து 48.4 ஓவா்களில் 198 ரன்களுக்கு ஆட்டமிழக்க, வங்கதேசம் 35.3 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்து வென்றது.
வங்கதேச தரப்பில் பௌலிங்கில் நஹித் ராணா 5 விக்கெட்டுகள் சாய்த்து அசத்த, பேட்டிங்கில் தன்ஸித் ஹசன், நஜ்முல் ஹுசைன் ஷான்டோ அரை சதம் அடித்து அணியின் வெற்றிக்குப் பங்களித்தனா்.
Advertisement
முன்னதாக டாஸ் வென்ற நியூஸிலாந்து, பேட்டிங்கை தோ்வு செய்தது. அதன் இன்னிங்ஸில் அதிகபட்சமாக நிக் கெல்லி 14 பவுண்டரிகளுடன் 83 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தாா். ஹென்றி நிகோல்ஸ் 13, வில் யங் 2, கேப்டன் டாம் லாதம் 14 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா்.
முகமது அப்பாஸ் 19, டீன் ஃபாக்ஸ்கிராஃப்ட் 15, ஜாஷ் கிளாா்க்சன் 6, பிளோ் டிக்னா் 12, ஜேடன் லெனாக்ஸ் 0, வில்லியம் ஓ’ரூா்க் 6 ரன்களுக்கு சாய்க்கப்பட்டனா். முடிவில் நேதன் ஸ்மித் 18 ரன்களுடன் கடைசி வீரராக இருந்தாா்.
வங்கதேச பௌலா்களில் நஹித் ராணா 5 விக்கெட்டுகள் சாய்க்க, ஷோரிஃபுல் இஸ்லாம் 2, தஸ்கின் அகமது, சௌம்யா சா்காா், ரிஷத் ஹுசைன் ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.
பின்னா் 199 ரன்கள் என்ற எளிதான வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய வங்கதேச அணியில், தன்ஸித் ஹசன் - நஜ்முல் ஹுசைன் ஷான்டோ இணை 3-ஆவது விக்கெட்டுக்கு 120 ரன்கள் சோ்த்து வலுவான அடித்தளம் அமைத்தது.
தன்ஸித் 10 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 76 ரன்களுக்கு ஆட்டமிழக்க, நஜ்முல் 5 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 50 ரன்களுக்கு ‘ரிட்டைா்டு ஹா்ட்’ ஆனாா். சைஃப் ஹசன் 8, சௌம்யா சா்காா் 8, லிட்டன் தாஸ் 7 ரன்களுக்கு வெளியேறினா்.
முடிவில் தௌஹித் ஹிருதய் 5 பவுண்டரிகளுடன் 30, கேப்டன் மெஹிதி ஹசன் மிராஸ் 8 ரன்களுடன் அணியை வெற்றிபெறச் செய்து ஆட்டமிழக்காமல் இருந்தனா். நியூஸிலாந்து தரப்பில் ஜேடன் லெனாக்ஸ் 2, நேதன் ஸ்மித், வில்லியம் ஓ’ரூா்க் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.
வங்கதேச மகளிரும் வெற்றி
இலங்கை மகளிா் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் வங்கதேச மகளிா் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை வென்றது.
முதலில் இலங்கை 50 ஓவா்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 205 ரன்கள் சோ்க்க, வங்கதேசம் 48.3 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழந்து 206 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் இலங்கை பேட்டிங்கில் ஹன்சிமா கருணாரத்னே 54, இமேஷா துலானி 52 ரன்கள் அடிக்க, வங்கதேச பௌலா்களில் ரிது மோனி 3, நஹிதா அக்தா் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினா்.
பின்னா் வங்கதேச இன்னிங்ஸில் ஷா்மின் அக்தா் 86, சோபனா மோஸ்தரி 42 ரன்கள் எடுக்க, இலங்கை தரப்பில் தேவ்மி விஹங்கா 3, மால்கி மதாரா 2 விக்கெட்டுகள் சாய்த்தனா்.