இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 2-வது ஆட்டம் குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது.
மொத்தம் 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரின் முதல் ஆட்டத்தில் வென்ற இந்தியா, இந்த ஆட்டத்திலும் வெற்றியுடன் தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் உள்ளது.
இந்தத் தொடரின் இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் மைக்கேல் பிரேஸ்வெல் முதலில் இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளார்.
இந்திய அணியைப் பொருத்தவரை, முதல் ஆட்டத்தில் அபாரமாக விளையாடி சதத்தை நழுவவிட்ட விராட் கோலியுடன், கேப்டன் ஷுப்மன் கில், ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோரும் இந்த ஆட்டத்திலும் அணியின் ஸ்கோருக்கு பலம் சேர்ப்பார்கள் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் இருக்கிறது.
கடந்த ஆட்டத்தில் விரைவாகவே வெளியேறிய தொடக்க வீரர் ரோஹித் சர்மா, இந்த ஆட்டத்தில் நிலைத்து நின்று ரன்கள் சேர்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
காயம் காரணமாக வெளியேறிய ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக ஆயுஷ் பதோனி அணியில் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிளேயிங் லெவனில் நிதீஷ்குமார் ரெட்டிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து அணியை பொருத்தவரை, டெவன் கான்வே, ஹென்றி நிகோலஸ், டேரில் மிட்செல் ஆகியோர் அந்த அணியின் ஸ்கோரை அபாரமாக உயர்த்த உதவினர்.
கடந்த போட்டியில் சரியாக சோபிக்காத தமிழக வம்சாவளி வீரர் ஆதித்யா அசோக் அணியில் இருந்து கழட்டிவிடப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக இடக்கைச் சுழற்பந்து வீச்சாளர் ஜேடன் லெனாக்ஸுக்கு முதல்முறையாக அணியில் விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பனி அதிகம் இருக்கும் என்பதால், இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் அதிக ரன் குவிக்கப்படும். மேலும், இரண்டாவது இன்னிங்ஸிலும் சேசிங்கிலும் அதிரடி காட்டப்படலாம்.
இந்திய அணி விவரம்
ரோஹித் சர்மா, ஷுப்மன் கில் (கேப்டன்), விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயர், கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, நிதீஷ்குமார் ரெட்டி, ஹர்ஷித் ராணா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ்.
நியூசிலாந்து அணி விவரம்
டெவன் கான்வே (விக்கெட் கீப்பர்)), ஹென்றி நிகோலஸ், வில் யங், டேரில் மிட்செல், கிளென் ஃபிலிப்ஸ், மிட்செல் ஹே, மைக்கேல் ரே, மைக்கேல் பிரேஸ்வெல், ஜாக் ஃபோக்ஸ், கைல் ஜேமிசன், ஜேடன் லெனாக்ஸ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.