மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆப்கானிஸ்தான் - மேற்கிந்தியத் தீவுகள் இடையேயான முதல் டி20 போட்டி துபையில் நேற்று (ஜனவரி 19) நடைபெற்றது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது. ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் எடுத்தது.
அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர் ரஹ்மனுல்லா குர்பாஸ் முதல் பந்திலேயே ரன் அவுட் ஆகி ஏமாற்றமளித்தார். செதிக்குல்லா அடல் 2 ரன்களில் ஆட்டமிழக்க, இப்ராஹிம் ஸத்ரான் மற்றும் டார்விஷ் ரசூலி ஜோடி சேர்ந்தனர். இந்த இணை அபாரமாக விளையாடியது.
அதிரடியாக விளையாடிய இருவரும் அரைதம் விளாசி அசத்தினர். டார்விஷ் ரசூலி 59 பந்துகளில் 84 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 8 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். இப்ராஹிம் ஸத்ரான் அதிரடியாக 56 பந்துகளில் 87 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 8 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும்.
வெற்றியுடன் தொடங்கிய ஆப்கானிஸ்தான்
182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம், 38 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
மேற்கிந்தியத் தீவுகள் அணியில் குவெண்டின் சாம்ப்சன் அதிகபட்சமாக 30 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, குடகேஷ் மோட்டி 28 ரன்களும், ஜான்சன் சார்லஸ் 27 ரன்களும் எடுத்தனர்.
ஆப்கானிஸ்தான் தரப்பில் ஜியா உர் ரஹ்மான் மூன்று விக்கெட்டுகளையும், முஜீப் உர் ரஹ்மான், கேப்டன் ரஷீத் கான் மற்றும் நூர் அகமது தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டார்விஷ் ரசூலிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆப்கானிஸ்தான் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.