ரோஹித் சர்மாவின் அதிரடியான ஆட்டத்தை பின்பற்றுவதாக இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் தங்களுக்குள் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றன. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது டி20 போட்டி ராய்பூரில் இன்று (ஜனவரி 23) நடைபெறுகிறது.
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடிய அரைசதம் விளாசினார். அவர் 35 பந்துகளில் 84 ரன்கள் (5 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள்) குவித்து அசத்தினார். அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணி பெரிய இலக்கை குவிக்க உதவிய அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
ரோஹித் சர்மாவை பின்பற்றுகிறேன்
முதல் போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிஷேக் சர்மா, டி20 போட்டிகளில் ரோஹித் சர்மாவின் அதிரடியான ஆட்டத்தைப் பின்பற்றுவதாக தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ரோஹித் சர்மா நாட்டுக்காக நிறைய விஷயங்கள் செய்துள்ளார். பவர்பிளேவில் அவர் கொடுக்கும் அதிரடியான தொடக்கம் எப்போதும் எதிரணிக்கு அழுத்தத்தை ஏற்படுத்தும். இந்திய அணியில் நான் அறிமுகமானபோது இதனையே பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் என்னிடமிருந்து எதிர்பார்த்தனர்.
அதிரடியாக விளையாடுவது எனக்குப் பொருத்தமான ஒன்றாக இருப்பதாக உணர்ந்தேன். ஏனெனில், எனக்கு முதல் பந்திலிருந்தே அதிரடியாக விளையாடுவது மிகவும் பிடிக்கும். ரோஹித் சர்மாவின் அதிரடியான ஆட்டத்தை நான் பின்பற்றி விளையாடுகிறேன். இந்திய அணிக்காக இவ்வாறு அதிரடியாக விளையாடுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
நான் முதிர்ச்சியடைந்த வீரராக மாறிவிட்டேன் எனக் கூற மாட்டேன். ஏனெனில், நான் கற்றுக்கொள்வதற்கான விஷயங்கள் எப்போதும் இருந்துகொண்டே இருக்கின்றன. ஆனால், முதல் 6 ஓவர்களில் அதிரடியாக விளையாடி ரன்கள் குவிப்பது என்னுடைய வேலை என்பதை உணர்கிறேன். அதற்காக அதிகம் பயிற்சி மேற்கொண்டுள்ளேன். நான் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தால், அணியில் உள்ள வீரர்கள் சிறப்பாக விளையாடுவதற்கு அது உதவியாக இருக்கும்.
அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டுமென்றால், அதற்கேற்றவாறு நான் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். அதன் காரணமாகவே, போட்டிகளுக்கு முன்பாக நான் எப்போதும் கடினமாக பயிற்சியில் ஈடுபடுகிறேன். எனக்கு 10 நாள்கள் கிடைக்கும்போது, அடுத்த தொடரில் எந்த பந்துவீச்சாளரை எதிர்கொள்வோம் என்பது குறித்து சிந்தித்து அதற்கேற்றவாறு பயிற்சியில் ஈடுபடுவேன். எதிர்வரும் டி20 உலகக் கோப்பைத் தொடருக்காகவும் பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். உலகக் கோப்பைத் தொடர் இந்தியா முழுவதும் நடைபெறுவதால், பயிற்சி மேற்கொள்வதே சிறப்பாக செயல்படுவதற்கான ஒரே வழி என எனக்குத் தெரியும் என்றார்.
இந்திய அணிக்காக கடந்த 2024 ஆம் ஆண்டு டி20 போட்டிகளில் அறிமுகமான அபிஷேக் சர்மா, இதுவரை 34 போட்டிகளில் விளையாடி 1199 ரன்கள் எடுத்துள்ளார். அதில் இரண்டு சதங்கள் மற்றும் 7 அரைசதங்கள் அடங்கும்.
அதிரடியாக விளையாடும் அபிஷேக் சர்மாவின் அணுகுமுறை அவரை ஐசிசி டி20 போட்டிகளில் பேட்டர்களுக்கான தரவரிசையில் முதலிடத்துக்கு உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.