முகப்பு
ஐபிஎல்

ஆர்சிபி கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலியை நீக்கவேண்டும்: கெளதம் கம்பீர்

எட்டு வருடங்களாக விளையாடியும் ஐபிஎல் கோப்பையை அவரால் பெற்றுத் தர முடியவில்லை... 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:49 PM
பகிர்:

ஆர்சிபி கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலியை நீக்கவேண்டும் என முன்னாள் வீரர் கெளதம் கம்பீர் கூறியுள்ளார். 

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் வெளியேற்றும் சுற்றில் சன்ரைஸா்ஸ் ஹைதராபாத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூா் ராயல் சேலஞ்சா்ஸை வீழ்த்தியது.

முன்னதாக முதலில் பேட் செய்த பெங்களூா் ராயல் சேலஞ்சா்ஸ் அணி 20 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள்சோ்த்தது. பின்னா் ஆடிய ஹைதராபாத் அணி 20 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்தது.

இந்த ஆட்டத்தில் தோல்வி கண்டதால் பெங்களூா் அணி போட்டியிலிருந்து வெளியேற நேரிட்டது. அதேநேரத்தில் பெங்களூரை வீழ்த்தியதன் மூலம் 2-ஆவது தகுதிச்சுற்றில் விளையாட தகுதி பெற்றுள்ள ஹைதராபாத், அதில் தில்லி கேபிடல்ஸ் அணியை சந்திக்கிறது. இந்த ஆட்டம் அபுதாபியில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

இந்த வருட ஐபிஎல் போட்டியின் லீக் சுற்றில் கடைசி நான்கு ஆட்டங்களில் தோல்வியடைந்தாலும் கோலி தலைமையிலான ஆர்சிபி அணி மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்றது.

2016-ல் லீக் சுற்றின் முடிவில் 2-ம் பிடித்து பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, கடந்த சில வருடங்களாக மோசமாக விளையாடி வருகிறது. 

2018-ல் 6-ம் இடம், 2017, 2019 ஆண்டுகளில் கடைசி இடம் எனக் கடந்த மூன்று வருடங்களாக மிக மோசமாகவே விளையாடி வருகிறது. இதையடுத்து, அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன், பந்துவீச்சுப் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா ஆகியோர் நீக்கப்பட்டார்கள். அதற்குப் பதிலாக தலைமைப் பயிற்சியாளராக சைமன் கடிச்சும் அணி இயக்குநராக மைக் ஹெஸ்ஸனும் தேர்வு செய்யப்பட்டார்கள். ஐந்து முறை பிளே ஆஃப்புக்குத் தகுதி பெற்றும் மூன்று முறை இறுதிச்சுற்றில் விளையாடியும் பிரபல வீரர்களைக் கொண்டிருந்தும் ஆர்சிபி அணியால் இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வெல்லமுடியவில்லை. 

2013 ஆண்டு முதல் ஆர்சிபி அணியின் கேப்டனாக கோலி உள்ளார். இந்த எட்டு வருடங்களில் மூன்று முறை பிளேஆஃப்புக்கு ஆர்சிபி அணி தகுதி பெற்றுள்ளது.

இந்நிலையில் ஆர்சிபி அணியின் தோல்விகளுக்குப் பொறுப்பேற்று கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலக வேண்டும் என்று முன்னாள் வீரர் கெளதம் கம்பீர் கூறியுள்ளார். க்ரிக்இன்ஃபோ இணையத்தளத்துக்கு அளித்த பேட்டியில் கம்பீர் கூறியதாவது:

ஆர்சிபி அணியின் வெற்றி, தோல்விகளுக்கு விராட் கோலி பொறுப்பேற்க வேண்டும். எட்டு வருடங்களாக விளையாடியும் ஐபிஎல் கோப்பையை அவரால் பெற்றுத் தர முடியவில்லை. எட்டு வருடங்கள் என்பது நீண்ட காலம். வேறு எந்த கேப்டனாவது எட்டு வருடங்கள் விளையாடி கோப்பையைப் பெற்றுத் தராமல் இருந்திருந்தால் அவரால் அதே அணியில் கேப்டனாக இருந்திருக்க முடியுமா? எனவே இதற்கு கோலி பொறுப்பேற்க வேண்டும். 

ஒரு வருடம் மட்டும் சரியாக விளையாடவில்லை என்பதற்காகச் சொல்லவில்லை. விராட் கோலி மீது எனக்கு எவ்வித பகைமை உணர்வும் கிடையாது. ஆனால் நடந்ததற்கு அவர் பொறுப்பேற்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன். 

அஸ்வினுக்கு என்ன நடந்தது என்று பாருங்கள். இரண்டு வருடங்களாக அவரால் பஞ்சாப் அணிக்கு ஐபிஎல் கோப்பையைப் பெற்றுத் தர முடியவில்லை. உடனே அவரை அணியிலிருந்து நீக்கிவிட்டார்கள். தோனி, ரோஹித் சர்மா, கோலி பற்றி பேசுகிறோம். தோனி மூன்று முறையும் ரோஹித் சர்மா நான்கு முறையும் ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளார்கள். அதனால் தான் அவர்களால் நீண்ட நாளாக கேப்டனாக இருக்க முடிகிறது. எட்டு வருடங்களாக ஐபிஎல் கோப்பையைப் பெற்றுத் தந்திருக்காவிட்டால் ரோஹித் சர்மாவையும் கேப்டன் பதவியிலிருந்து நீக்கியிருப்பார்கள். விதிமுறைகள் எல்லோருக்கும் ஒன்றாக இருக்கவேண்டும். 

நிர்வாகத்திடமிருந்தோ பயிற்சியாளர்களிடமிருந்தோ பொறுப்பு வருவதை விடவும் கேப்டன் இதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும். நீங்கள் தான் கேப்டன், நீங்கள் தான் தலைவர். பாராட்டுகளை ஏற்றுக்கொள்ளும்போது விமர்சனங்களையும் ஏற்றுக்கொண்டாக வேண்டும் என்றார். 

முழு கட்டுரையைப் படிக்க →