இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வை அறிவிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐபிஎல் 2025 ஆம் ஆண்டுக்கான போட்டிகள் கடந்த மார்ச் 22 அன்று தொடங்கின. 74 போட்டிகள் கொண்ட இந்தத் தொடர் வருகிற மே 25 வரை நடைபெறவுள்ளன.
சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் இன்று நடைபெறும் 17-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியும் டெல்லி கேப்பிடல்ஸ் (டிசி) அணியும் விளையாடி வருகின்றனர்.
இந்தப் போட்டியே சிஎஸ்கே முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் கடைசியாக இருக்குமென்றும் இத்துடன் அவர் ஓய்வை அறிவிக்கவுள்ளதாகவும் வெளியான தகவல்கள் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதுமட்டுமின்றி, இன்றைய போட்டியில் காயம் காரணமாக கேப்டன் ருதுராஜ் விளையாடமாட்டார் என்றும் அணியை தோனி வழிநடத்துவார் என்றும் சொல்லப்பட்டது. ஆனால், போட்டி ஆரம்பிக்கையில் ருதுராஜே கேப்டனாக இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக, இந்தத் தொடரில் சிஎஸ்கே அணி விளையாடிய 2-வது போட்டியில் தோனி முன்பே களமிறங்கி ஆட்டத்தை வெல்ல உதவுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அவர் 9-வது ஆட்டக்காரராக அஷ்வினுக்குப் பின் களமிறங்கியது விமர்சனங்களை ஏற்படுத்தியது.
அத்துடன், அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங் ஒரு பேட்டியில், “தோனியால் முதல் பத்து ஓவர்கள் நின்று விளையாட முடியாது. அவருக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளது. எனவே, அவர் பின்னால் களமிறக்கப்படுகிறார்” எனக் கூறியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, முந்தைய ஐபிஎல் தொடரிலேயே ஓய்வை அறிவிக்காமல் விளம்பர நோக்கத்திற்காக மட்டுமே ஐபிஎல் விளையாடுகிறார் என்று தோனி மீது சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.
இந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட் தொடர்களிலிருந்து முன்னரே ஓய்வுபெற்ற மகேந்திர சிங் தோனி இன்று ஐபிஎல் தொடரிலிருந்து தனது ஓய்வை அறிவிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுபற்றிய அதிகாரப்பூர்வ செய்திகள் எதுவும் வெளிவரவில்லை.
மேலும், தோனியின் பெற்றோர் முதல்முறையாக நேரில் அவர் விளையாடும் போட்டியைக் காண வந்துள்ளனர். இது ரசிகர்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.