பாரீஸ் ஒலிம்பிக்கில் மகளிா் குத்துச்சண்டையில் 66 கிலோ எடைப் பிரிவில் அல்ஜீரியாவின் இமென் கெலிஃப் - இத்தாலியின் ஏஞ்செலா காரினி சமீபத்தில் மோதினா்.
மோதல் தொடங்கிய 46 விநாடிகளுக்குள்ளாகவே போட்டியிலிருந்து விலகுவதாக காரினி அறிவித்தாா். அத்துடன், களத்திலேயே அவா் முழங்காலிட்டு அழுதாா்.
இதனால் இமென் கெலிஃப் ஊடக வெளிச்சத்துக்கு வந்தார். அவர் மீது ஏற்கனவே இருந்த புகார்களும் சமூக வலைதளங்களில் பேசுபொருளானது.
பாரீஸ் ஒலிம்பிக்கில் தனது பாலினம் தொடர்பாக தவறான எண்ணங்கள் மற்றும் வெறுப்புணர்வை பலரும் வெளிப்படுத்துவது தனது கண்ணியத்தை பாதிப்பதாகவும், இதுபோன்ற தவறான எண்ணங்கள் மற்றும் விமர்சனங்களால் மனதளவில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அல்ஜீரிய குத்துச்சண்டை வீராங்கனை இமென் கெலிஃப் சமீபத்தில் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பாக 2023 உலக சாம்பியன்ஷிப் போட்டியில் குரோமோசோம் சோதனையில் தோல்வியடைந்தார். ஆனால் ஒலிம்பிக் நிர்வாகம் அவர் சரியான பாலின தகுதி பெற்றுள்ளதாக இந்த பாரீஸ் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள அனுமதி அளித்தது.
இதேபோல சீன வீராங்கனை லின் யு டிங் பாலின சோதனையில் 2023 உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தடை செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இவர்கள் இருவரும் அவரவர் பிரிவுகளில் இறுதிப் போட்டிக்கு தேர்வாகியுள்ளார்கள்.
நேற்று நடந்த 66 கிலோ எடைப் பிரிவில் அரையிறுதியில் இமென் கெலிஃப் தாய்லாந்து வீராங்கனையுடன் 5-0 என அபார வெற்றி பெற்றார். சீன வீராங்கனை யாங் லியு திபெத் வீராங்கனையுடன் 4-1 என வெற்றி பெற்றார்.
பாலின சர்ச்சையில் சிக்கிய மற்றுமொரு சீன வீராங்கனையான லின் யு டிங் 57 கிலோ எடைப் பிரிவில் விளையாடுகிறார். அரையிறுதியில் 5-0 என துருக்கி வீராங்கனையை வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். இவருடன் போலந்தின் ஜூலியா மோதுகிறார்.
இந்த இருவருமே இறுதிப் போட்டியில் வெல்வார்களென எதிர்பார்ப்பு மிகுந்துள்ளது.
இமென் கெலிஃபின் இறுதிப் போட்டி சனிக்கிழமை (ஆக.10) நள்ளிரவு 2.21 மணிக்கும் லின் யு டிங்கின் இறுதிப் போட்டி சனிக்கிழமை (ஆக.10) நள்ளிரவு 1மணிக்கு நடைபெறவிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.