முகப்பு
செய்திகள்

மிர்புர் டெஸ்ட் - இங்கிலாந்தை மண்ணைக் கவ்வச்  செய்த வங்கதேசம்

இங்கிலாந்துக்கெதிரான இரண்டாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் 108 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று வரலாற்று சாதனை புரிந்தது.

Updated On : 25 ஜனவரி, 2024 at 4:50 AM
பகிர்:

மிர்புர்: இங்கிலாந்துக்கெதிரான இரண்டாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் 108 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று வரலாற்று சாதனை புரிந்தது.

வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் இங்கிலாந்து அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.  சிட்டகாங்கில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் நூலிழையில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 1-0 என முன்னிலையில் இருந்தது.

இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 2-வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி மிர்புரில் வெள்ளிக்கிழமையன்று தொடங்கியது.

டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர் தமீம் இக்பால் சிறப்பாக விளையாடி சதம் (104) அடித்தார். ஆனால் இதர வீரர்கள் சொதப்பவே அந்த அணி முதல் இன்னிங்சில் 220 ரன்னில் சுருண்டது. பின்னர் தனது முதல் இன்னிங்சை துவக்கிய இங்கிலாந்து அணி  வங்கதேச அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளரான மெஹெதி ஹசன் மிராஸின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 244 ரன்னில் சுருண்டது. ஜோ ரூட் மட்டும் அதிகபட்சமாக 56 ரன்கள் சேர்த்தார். வங்கதேசம் சார்பில் மெஹெதி ஹசன் மிராஸ் 6 விக்கெட்டுக்கள் அள்ளினார்.

24 ரன்கள் பின்தங்கிய நிலையில் வங்கதேசம் தந்து இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. தமீம் இக்பால் (40), இம்ருல் கெய்ஸ் (78), மெஹ்முதுல்லா (47), சாஹிப் அல் ஹசன் (41) ஆகியோர் குறிப்பிடத்தக்க வகையில் ரன்கள் சேர்க்க, வங்கதேசம் 2-வது இன்னிங்சில் 296 ரன்கள் சேர்த்து ஆல் அவுட் ஆனது.

இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து வங்கதேச அணி  இங்கிலாந்தை விட 272 ரன்கள் கூடுதலாகப் பெற்றிருந்தது. வெற்றிக்கு 273 ரன்கள் என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களம்  இறங்கியது.

அந்த அணியின் தொடக்க வீரர்கள் குக் மற்றும் டக்கெட் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இருவரும் அரைசம் அடித்தனர். முதல் விக்கெட்டுக்கு சரியாக 100 ரன்கள் எடுத்த பொழுது, 56 ரன்கள் எடுத்த நிலையில் டக்கெட் மெஹெதி பந்தில் ஆட்டம் இழந்தார்.

ஆனால் இவர்கள் உருவாக்கி கொடுத்த சிறப்பான துவக்கத்தை மற்ற வீரர்கள் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அதன்பி்ன் வந்த ஜோ ரூட்டை 1 ரன்னில் சாஹிப் அல் ஹசன் வெளியேற்ற, பின்னர் வந்த பேலன்ஸ் (5), மொயீன் அலி (0) ஆகியோரும் விரைவில் வெளியேறினார்கள். அடுத்த அதிச்சியாக மெஹெதி  அரை சதத்துடன்  களத்தில் இருந்த கேப்டன் குக்கையும் 59 ரன்னில் வெளியேற்றினார். இதனால் இங்கிலாந்து அணி கடைசி 28 ரன்களை சேர்ப்பதற்குள் ஐந்து விக்கெட்டுக்களை இழந்தது.

மெஹெதியின் துல்லிய பந்து வீச்சால் பேர்ஸ்டோவ் 3 ரன்னில் ஆட்டம் இழந்தார். இங்கிலாந்து அணியின் ஸ்கோர் 161 ரன்னாக இருக்கும்போது சாஹிப் அல் ஹசன் பென் ஸ்டோக்ஸ் (25), ரஷித் அன்சாரி (0) ஆகிய இருவரையும் ஒரே ஒவரில் ஆட்டமிழக்கச் செய்தார். கடைசி விக்கெட்டாக களம் இறங்கிய ஸ்டீவன் பின்னை மெஹெதி டக் அவுட்டாக்க இங்கிலாந்து அணி 164 ரன்னில் சுருண்டது.

இதனால் வங்கதேசம் 108 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அத்துடன் தொடரையும் 1-1 என சமன் செய்துள்ளது.  முதல் இன்னி்ங்சில் 6 விக்கெட்டுக்கள் வீழ்த்திய மெஹெதி , இரண்டாவது இன்னிங்சிலும் ஆறு விக்கெட்டுகளை  அள்ளினார். .  சாஹிப் அல் ஹசன் 4 விக்கெட் வீழ்த்தினார்.

மெஹெதி ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை வென்றார். இது அவருக்கு இரண்டாவது டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றியின் மூலம் வங்கதேசம் இங்கிலாந்து அணிக்கெதிராக டெஸ்ட் போட்டிகளில் முதல் வெற்றியை பதிவு செய்து, வரலாற்று  சாதனை படைத்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →