மீண்டும் மோசமாக விளையாட மாட்டோம்: கோலி உறுதி
நாங்கள் ஒரு டெஸ்ட் போட்டியில் சரியாக விளையாடவில்லை. இது எல்லா டெஸ்ட் போட்டிகளிலும் நடைபெற வாய்ப்பில்லை.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி பெங்களூரில் நாளை தொடங்குகிறது.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணியுடன் மோதி வருகிறது. இதில் புணேவில் நடைபெற்ற முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா 333 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.
பெங்களூர் டெஸ்ட் போட்டி குறித்து விராட் கோலி கூறியதாவது:
எங்களால் இந்த டெஸ்ட் தொடரை வெல்லமுடியும் என்கிற நம்பிக்கை உள்ளது. இதை ஒரு பெரிய சவாலாகக் கொண்டுள்ளோம். தொடரில் திருப்புமுனை ஏற்படுத்தி வழக்கமாக விளையாடும் தரமான கிரிக்கெட்டை வெளிப்படுத்த முனைப்புடன் உள்ளோம். நாங்கள் ஒரு டெஸ்ட் போட்டியில் சரியாக விளையாடவில்லை. இது எல்லா டெஸ்ட் போட்டிகளிலும் நடைபெற வாய்ப்பில்லை. இதுபோன்று நிச்சயமாக இனி மோசமாக விளையாடமாட்டோம் என்பதை நான் உறுதியாகக் கூறமுடியும்.
தோல்வியினால் என்னென்ன தவறுகள் செய்தோம் என்று அலச ஒரு வாய்ப்பு கிடைத்தது. வெற்றிபெறும்போது எல்லா அம்சங்களிலும் கவனம் செலுத்தமுடியாது. யாராவது ஒரு வீரர் அக்குறைகளைச் சரிபடுத்திவிடுவார். எனவே டெஸ்ட் பயணத்தில் தோல்விகளும் முக்கியம் என்றார்.