முகப்பு
செய்திகள்

5 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் தென் ஆப்பிரிக்கா 200 ரன்கள் முன்னிலை!

தென் ஆப்பிரிக்க அணி 4-வது நாள் மதிய உணவு இடைவேளையின்போது 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்துள்ளது...

Updated On : 30 ஜனவரி, 2024 at 11:59 AM
பகிர்:

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 4-வது நாள் மதிய உணவு இடைவேளையின்போது 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்துள்ளது.

இந்த டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 92.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 307 ரன்கள் எடுத்தது. 28 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி மூன்றாவது நாள் முடிவில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 90 ரன்கள் எடுத்தது. போதிய வெளிச்சம் இல்லாததால் ஆட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. ஏபி டி வில்லியர்ஸ் அரை சதத்துடனும், எல்கர் 78 பந்துகளில் 36 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.

முதல் நாளில் தென் ஆப்பிரிக்க அணி 90 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 269 ரன்கள் குவித்திருந்தது. இரண்டாவது நாளில் அந்த அணி எஞ்சியிருந்த 4 விக்கெட்டுகளையும் இழந்து 113.5 ஓவர்களில் 335 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மார்க்ரம் 94 ரன்களும், ஹசிம் ஆம்லா 82 ரன்களும் எடுத்தனர். கேப்டன் ஃபாப் டூ பிளெஸ்ஸிஸ் 63 ரன்கள் எடுத்தார். அதிகபட்சமாக அஸ்வின் 4 விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இன்று மிகுந்த நம்பிக்கையுடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்காவின் டி வில்லியர்ஸும் எல்கரும் இந்திய அணியின் திட்டங்களை முறியடித்தார்கள். இருவரும் ஒன்றிணைந்து 167 பந்துகளில் 100 ரன்கள் எடுத்தார்கள். எல்கர் 1 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 93 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். இருவரும் சேர்ந்து 141 ரன்கள் எடுத்து இந்திய அணியைப் பின்னுக்குத் தள்ளிய நிலையில் டி வில்லியர்ஸின் விக்கெட்டால் ஆட்டத்தில் திருப்பம் ஏற்பட்டது. ஷமி வீசிய 42-வது ஓவரில் பார்தீவ் படேலிடம் கேட்ச் கொடுத்து 80 ரன்களில் வெளியேறினார் டி வில்லியர்ஸ். அடுத்தச் சில ஓவர்களில் எல்கரை 61 ரன்களிலும் குயிண்டன் டி காக்கை 12 ரன்களிலும் வெளியேற்றி அசத்தினார் ஷமி. இதனால் ஆட்டம் மீண்டும் இந்திய அணி பக்கம் திரும்பியது. 

4-ம் நாள் மதிய உணவு இடைவேளையின்போது தென் ஆப்பிரிக்க அணி 55 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணி, 5 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 201 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.