விளையாட்டு வீரர்கள் எதிர்த்த ஹரியானா மாநில அரசின் உத்தரவு நிறுத்திவைப்பு!
தங்கள் மாநிலத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் தங்களுடைய வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கை (33%)...
தங்கள் மாநிலத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் தங்களுடைய வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கை (33%) ஹரியானா விளையாட்டு கவுன்சிலுக்கு வழங்கவேண்டும் என்று சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது ஹரியானா அரசு. மாநிலத்தின் விளையாட்டு வளர்ச்சிக்கும் திறமைகளைக் கண்டெடுக்கவும் அந்தத் தொகை பயன்படுத்தப்படும் என்றும் அரசு கூறியது. இதற்கு ஹரியானாவைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தார்கள்.
இந்த உத்தரவு விளையாட்டு வீரர்களைக் கேலிக்குள்ளாக்குகிறது. இதர விளையாட்டு வீரர்களை விடவும் அதிகமாகச் சம்பாதிக்கும் கிரிக்கெட் வீரர்களுக்கு இந்த உத்தரவு கிடையாது. விளம்பரங்கள் மூலமாக கிரிக்கெட் வீரர்கள் அதிகமாகச் சம்பாதிக்கிறார்கள். ஆனால் குத்துச்சண்டை, கபடி, மல்யுத்த போன்ற விளையாட்டுகளில் ஈடுபடும் வீரர்களுக்கு விளம்பரங்கள் வழியாக அந்தளவுக்கு வருமானம் கிடைப்பது கிடையாது. எங்களுக்குக் கிடைக்கும் வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கை மாநில அரசுக்கு கொடுத்துவிட்டால் எங்களுக்குச் சிரமம் ஏற்படும். மீதமுள்ள பணம் எவ்வளவு இருக்கும் என நினைக்கிறீர்கள் என்று கேள்வியெழுப்பினார் மல்யுத்த வீராங்கனை கீதா போகத்.
நாங்கள் எவ்வளவு கடினமாக உழைக்கிறோம் என்பது அரசுக்குத் தெரியுமா, தெரியாதா? எங்கள் வருமானத்தில் ஒரு பகுதியை எப்படிக் கேட்கலாம்? பரிசுத்தொகைக்கு நாங்கள் வருமான வரி கட்டுகிறோம் என்பது மாநில அரசுக்குத் தெரியாதா? இதுகுறித்து அரசு எங்களிடம் விவாதித்திருக்க வேண்டும். இந்த உத்தரவை அமல்படுத்தினால் குறைவான பதக்கங்களே கிடைக்கும் என்றார் மல்யுத்த வீராங்கனை பபிதா போகத். யோகேஸ்வர் தத் கூறியதாவது: எங்களை அரசு அதிகாரிகளிடமிருந்து கடவுள்தான் காப்பாற்றவேண்டும். ஹரியானாவின் விளையாட்டு வளர்ச்சிக்கு அவர்களுடைய பங்களிப்பு ஒன்றும் கிடையாது. இந்த உத்தரவால் பலர் வேறு மாநிலங்களுக்குச் செல்லவுள்ளார்கள். இதற்கு அரசு அதிகாரிகள்தாம் காரணம் என்றார்.
Advertisement
வீரர்களின் மனக்குமுறல் குறித்து விளையாட்டுத்துறை அமைச்சர் அசோக் கெம்கா கூறியதாவது: அரசுப் பணியில் உள்ள வீரர்கள் மட்டுமே தங்கள் வருமானத்தின் ஒரு பகுதியை அரசுக்கு அளிக்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது என்றார்.
இந்நிலையில் விளையாட்டு வீரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த உத்தரவை நிறுத்தி வைப்பதாக ஹரியான முதல்வர் மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார். இதனால் விளையாட்டு வீரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.