பரபரப்பான முறையில் 3-வது டெஸ்டையும் கைப்பற்றி முழு வெற்றியடைந்த இங்கிலாந்து அணி!
இலங்கைக்கு எதிரான 3-வது டெஸ்டைப் பரபரப்பான முறையில் வென்றுள்ளது இங்கிலாந்து அணி...
இலங்கைக்கு எதிரான 3-வது டெஸ்டைப் பரபரப்பான முறையில் வென்றுள்ளது இங்கிலாந்து அணி. இதையடுத்து அந்த அணி 3-0 என டெஸ்ட் தொடரை முழுமையாக வென்றுள்ளது.
இலங்கை தலைநகர் கொழும்பில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய 3-வது டெஸ்டில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து அனைத்து விக்கெட் இழப்புக்கு 336 ரன்கள் குவித்தது. அடுத்து களம் கண்ட இலங்கை 240 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் முதல் இன்னிங்ஸில் 96 ரன்கள் முன்னிலை பெற்ற இங்கிலாந்து, 2-ஆவது இன்னிங்ஸில் 230 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து 327 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடிய இலங்கை அணி, 3-ம் நாளான ஞாயிற்றுக்கிழமை ஆட்டநேர முடிவில் 17 ஓவர்களில் 53 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றமான நிலையில் இருந்தது. இலங்கைக்கு 6 விக்கெட்டுகளே மீதமுள்ள நிலையில் 274 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது.
இன்று ஆட்டம் தொடங்கியபோது சண்டகன் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் இதற்கடுத்து ஜோடி சேர்ந்த குஷால் மெண்டிஸும் ரோஷன் சில்வாவும் சிறப்பாக விளையாடினார்கள். மெண்டிஸ் 86 ரன்களின்போது ஆட்டமிழந்தார். இதன்பிறகு 9 விக்கெட் இழப்புக்கு 226 ரன்கள் என்கிற நிலைமை உருவானது. ரோஷன் சில்வா 65 ரன்களில் ஆட்டமிழந்தார். எனினும் கடைசி விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த லக்மலும் புஷ்பகுமாராவும் எதிர்பாராதவிதமாக இங்கிலாந்துப் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டார்கள். கடைசி விக்கெட்டுக்கு 58 ரன்கள் சேர்த்தது ஜோடி. எனினும் வெற்றிக்கு 43 ரன்கள் தேவை என்கிற நிலைமை இருந்தபோது லக்மல் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் பரபரப்பான முறையில் நடைபெற்ற 3-வது டெஸ்டை 42 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடரை 3-0 என முழுமையாக வென்றுள்ளது. ஆட்ட நாயகன் விருது ஜானி பேர்ஸ்டோவுக்கும் தொடர் நாயகன் விருது பென் ஃபோக்ஸுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
Advertisement
1963-க்குப் பிறகு வெளிநாடுகளில் இப்போதுதான் இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடரில் முழு வெற்றியை அடைந்துள்ளது. 2004-ல் ஆஸ்திரேலியாவிடமும் கடந்த வருடம் இந்தியாவிடமும் மூன்று டெஸ்டுகளிலும் தோற்ற இலங்கை அணி மீண்டுமொருமுறை அனைத்து டெஸ்டுகளிலும் தோல்வியடைந்துள்ளது.
இலங்கைச் சுற்றுப்பயணத்தில் இங்கிலாந்து அணி டெஸ்ட் (3-0), ஒருநாள் (3-1), டி20 (1-0) என மூன்று தொடர்களையும் வென்றுள்ளது.