முகப்பு
செய்திகள்

ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை ஊக்கமருந்து சோதனையில் தோல்வி!

400 மீ. ஒட்டப்பந்தயத்தில் ஆசிய சாம்பியனாக உள்ள இந்திய வீராங்கனை நிர்மலா ஷியோரன், ஊக்க மருந்துப் பரிசோதனையில் தோல்வியடைந்துள்ளார்...

Updated On : 30 ஜனவரி, 2024 at 5:44 PM
பகிர்:

400 மீ. ஒட்டப்பந்தயத்தில் ஆசிய சாம்பியனாக உள்ள இந்திய வீராங்கனை நிர்மலா ஷியோரன், ஊக்க மருந்துப் பரிசோதனையில் தோல்வியடைந்துள்ளார். நிர்மலா உள்ளிட்ட 5 வீரர்கள் ஊக்க மருந்து சோதனையில் தோல்வியடைந்துள்ளதால் அவர்களுக்கு இடைக்காலத் தடை விதிகப்பட்டுள்ளது. 

கடந்த வருடம் புவனேசுவரத்தில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் 400 மீ. ஒட்டப்பந்தயத்தில் தங்கம் வென்றார் ஹரியானாவைச் சேர்ந்த நிர்மலா. அதேபோல  4x400 தொடர் ஓட்டப்பந்தயத்திலும் பங்கேற்று தங்கம் வென்றார். கடந்த வருட உலக சாம்பியன்ஷிப் போட்டிக்குப் பிறகு அவர் பயிற்சி முகாம்களுக்கு அவர் வருவதில்லை என்கிற புகார் எழுந்தது. கோல்ட் கோஸ்டில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் அவர் பங்கேற்கவில்லை. இந்தியத் தடகள சம்மேளனம், அவரைக் கண்டுபிடிக்க முடியாத நிலையை அறிவித்தது. எனினும் தனிப்பட்ட காரணங்களுக்காகப் பயிற்சி முகாமில் பங்கேற்கவில்லை என்று நிர்மலா சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

ஜகார்த்தா ஆசியப் போட்டிக்கான வீரர்களைத் தேர்வு செய்ய  நடத்தப்பட்ட மாநில சாம்பியன்ஷிப் போட்டியில் அவர் பங்கேற்றார். குவாஹட்டியில் நடைபெற்ற போட்டியில் 400 மீ. ஓட்டத்தில் ஹிமா தாஸுக்கு அடுத்ததாக 2-வது இடம் பெற்றார். இதனால் ஆசியப் போட்டிக்குத் தகுதியடைந்த நிர்மலா, ஜகார்த்தாவில் 400 மீ. ஓட்டத்தில் நான்காம் இடம் பெற்றார். 

Advertisement

ஆசியப் போட்டிக்குப் பிறகு மீண்டும் அவரைத் தேடவேண்டிய நிலைமை உருவானது. பாட்டியாலாவில் நடைபெற்ற பயிற்சி முகாம்களில் அவர் பங்கேற்கவில்லை. சர்வதேசப் போட்டியில் கலந்துகொள்ள தேசியப் பயிற்சி முகாம்களில் பங்கேற்கவேண்டும் என்று அனைத்து வீரர்களுக்கும் கட்டளை பிறப்பித்துள்ளது இந்தியத் தடகளச் சம்மேளனம். எனினும் அக்டோபர் 10 முதல் எங்கும் தேடவேண்டிய நிலைமையில் உள்ளார் நிர்மலா. 

இந்நிலையில் சர்வதேச தடகள சங்கம் நடத்திய ஊக்க மருந்து சோதனையில் நிர்மலா, சஞ்சீவினி ஜாதவ் (5000 & 10,000 மீ.), சந்தீப் குமார் (வட்டு எறிதல்), ஜுமா கதுன் (1500 மீ.), நவீன் சிகாரா (குண்டு அறிதல்) என ஐந்து வீரர்களும் தோல்வியடைந்துள்ளார்கள். இதையடுத்து தடை செய்யப்பட்ட மருந்தைப் பயன்படுத்தியதால் இவ்வீரர்களுக்குத் தற்காலிகத் தடை விதித்துள்ளது இந்தியத் தடகளச் சம்மேளனம். ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் இவர்களில் நிர்மலா, சஞ்சீவினி, சந்தீப் ஆகியோர் ஜகார்த்தா ஆசியப் போட்டியில் கலந்துகொண்டவர்கள். மேலும் பளுதூக்கும் வீராங்கனை பூணம் தலாலும் ஊக்க மருந்துப் பரிசோதனையில் தோல்வியடைந்துள்ளார்.

முதலில், இந்தியாவில் நடத்தப்பட்ட இவர்களுடைய ஊக்கமருந்து சோதனையில் தடகள வீரர்களுக்குச் சாதகமான முடிவுகளே வந்தன. எனினும் அந்த மாதிரிகளை மீண்டும் பரிசோதனை செய்தது உலக ஊக்க மருந்து தடுப்பு ஆணையம். அதில் அவர்கள் தடை செய்யப்பட்ட மருந்தைப் பயன்படுத்தியுள்ளது தெரியவந்துள்ளது. ஊக்கமருந்துத் தடுப்பு விதிகளை மீறியதால் ஆசிய சர்வதேசப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை நிர்மலாவுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது இந்தியத் தடகள வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments