முகப்பு
செய்திகள்

பத்தாயிரம் ரன்களைக் கடந்த பிறகு சதமடித்த விராட் கோலி: சாதனை மேல் சாதனை!

இந்திய கேப்டன் விராட் கோலி, குறைந்த இன்னிங்ஸில் 10,000 ஒருநாள் ரன்களை எடுத்து புதிய சாதனையைப் படைத்துள்ளார்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 5:08 PM
பகிர்:

இந்திய கேப்டன் விராட் கோலி, குறைந்த இன்னிங்ஸில் 10,000 ஒருநாள் ரன்களை எடுத்து புதிய சாதனையைப் படைத்துள்ளார். இதையடுத்து அவர் தனது 37-வது சதத்தைப் பூர்த்தி செய்துள்ளார்.

குவஹாட்டியில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி. இந்நிலையில், விசாகப்பட்டணத்தில் 2-வது ஒருநாள் ஆட்டம் இன்று தொடங்கியுள்ளது. 

டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. கலீல் அகமதுக்குப் பதிலாக குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார். மே.இ. அணியில் தாமஸுக்குப் பதிலாக ஒபட் மெக்காய் தேர்வாகியுள்ளார். இது அவருடைய அறிமுக ஒருநாள் ஆட்டமாகும்.

Advertisement

கடந்த ஆட்டத்தில் சதமெடுத்த ரோஹித் சர்மா,  இந்தமுறை 4-வது ஓவரில் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். 1 சிக்ஸர், 4 பவுண்டரிகள் என சுறுசுறுப்பாக விளையாடி வந்த தவன், 29 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். இதனால் இந்தமுறை இந்திய அணியின் நடுவரிசைக்கு ஒரு பொறுப்பு ஏற்பட்டது. நான்காம் நிலை வீரராகக் களமிறங்கிய ராயுடு விராட் கோலிக்கு நல்ல இணையாக விளங்கினார். பந்துகளை வீணடிக்காமல் விளையாடி வந்த விராட் கோலி, 56 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் அரை சதமெடுத்தார். இது அவருடைய 49-வது ஒருநாள் அரை சதம். மேலும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்கிற பெருமையையும் அவர் எட்டினார். இதற்கு முன்பு 39 இன்னிங்ஸில் 1573 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. அதை கோலி இன்று தாண்டியுள்ளார். இந்த இலக்கைத் தாண்ட கோலிக்கு 29 இன்னிங்ஸ் மட்டுமே தேவைப்பட்டுள்ளன. 

இந்நிலையில், 36.3 ஓவரின்போது 81 ரன்கள் எடுத்து 10,000 ரன்களைக் கடந்தார் கோலி. சச்சின் டெண்டுல்கரை விடவும் 54 இன்னிங்ஸ் குறைவாக விளையாடி இந்த இலக்கை அவர் எட்டியுள்ளார். 

10,000 ஒருநாள் ரன்கள் - குறைந்த இன்னிங்ஸ்

விராட் கோலி - 205 இன்னிங்ஸ்
சச்சின் டெண்டுல்கர் - 259 இன்னிங்ஸ்

இதன்பிறகு தனது அடுத்த இயல்பான சாதனையை நிகழ்த்தினார் விராட் கோலி. 106 பந்துகளில் சதத்தை எட்டினார். இது அவருடைய 37-வது ஒருநாள் சதமாகும். இதன் மூலம் அவர் மேலும் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். 3-ம் நிலை வீரராக கோலி எடுக்கும் 30-வது சதம் இது. 29 சதம் எடுத்திருந்த பாண்டிங்கின் சாதனையைத் தாண்டினார். இந்திய அணி 45 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் எடுத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments