முகப்பு
செய்திகள்

அஸ்வின் செய்தது தவறே இல்லை: பிரபல நடுவர் சைமன் டாஃபில் ஆதரவு

அஸ்வின் செய்த செயலால் கிரிக்கெட்டின் மாண்புக்கு எந்த இடத்திலும் இழுக்கு ஏற்படவில்லை என்று பிரபல முன்னாள் நடுவர் சைமன் டாஃபில் தெரிவித்துள்ளார். 

Updated On : 31 ஜனவரி, 2024 at 7:46 AM
பகிர்:

அஸ்வின் செய்த செயலால் கிரிக்கெட்டின் மாண்புக்கு எந்த இடத்திலும் இழுக்கு ஏற்படவில்லை என்று பிரபல முன்னாள் நடுவர் சைமன் டாஃபில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

என்னைப் பொறுத்தவரையில் அஸ்வின் செய்த மான்கட் வகை ஆட்டமிழப்பால், எந்த வகையிலும் கிரிக்கெட்டின் மாண்புக்கு இழுக்கு ஏற்படவில்லை. அவர் கள நடுவரிடம் ரன்-அவுட் முறைக்கு மட்டுமே அப்பீல் செய்தார். அதிலும் தனது பந்துவீச்சு முறை முழுமைப் பெறுவதற்கு முன்பு நிறுத்திவிட்டு, இந்த விதிமுறைகளின் அடிப்படையிலேயே எதிரணி வீரரை ஆட்டமிழக்கச் செய்துள்ளார். இந்த விவகாரம் கள நடுவர்களின் முடிவுக்கு அப்பாற்பட்டது. அதனால் தான் இது 3-ஆம் நடுவரால் வழங்கப்பட்ட தீர்ப்பாக அமைந்துள்ளது. 

எனவே விதிகளின் அடிப்படையில் செயல்பட்ட அஸ்வின் மீது அவதூறு புகார்களை வெளியிடுவது தேவையற்றது. மாறாக அந்த விதிமுறையின் மீதுதான் விமர்சனம் இருக்க வேண்டும். ஒரு பேட்ஸ்மேனை ஆட்டமிழக்கச் செய்ய பந்துவீச்சாளர்கள் அனைத்து முயற்சிகளையும் செய்வார்கள். இதில் என்ன தவறு உள்ளது என்று தெரியவில்லை. அப்படியென்றால் எல்பிடபள்யூ, கேட்ச் மற்றும் போல்ட் போன்ற ஆட்டமிழப்பு முறைகள் மட்டும் எந்த வகையில் நியாயமாகும், எனவே இதன் மீதான விவாதம் தேவையற்றது.

இந்த சம்பவம் நடைபெற்ற போது நான் இந்தியாவில் தான் இருந்தேன். அப்போது உடனடியாக அஸ்வினிடம் தொடர்பு கொண்டு பேசினேன். அப்போது இதனால் ஏற்பட்ட தேவையற்ற சர்ச்சைகளால் அவர் மனநிலை எவ்வாறு உள்ளது என்று கேட்டறிந்தேன். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவித்தேன். மேலும் அந்த ஆட்டமிழப்பு முறை கிரிக்கெட் விதிகளுக்குட்பட்டது தான் எனவும் விளக்கமளித்தேன் என்று தெரிவித்தார்.

கிரிக்கெட் உலகில் மிகவும் பிரபலமான நடுவர்களில் ஒருவராக திகழும் சைமன் டாஃபில், 2004-ஆம் ஆண்டு முதல் 2008-ஆம் ஆண்டு வரை தொடர்ந்து 5 முறை சிறந்த நடுவருக்கான ஐசிசி விருது பெற்றவர் ஆவார். கடந்த 2012-ஆம் ஆண்டு செப்டம்பர் 26-ஆம் தேதி டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியோடு நடுவர் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். 

முழு கட்டுரையைப் படிக்க →