இந்தியா - இங்கிலாந்து தொடர்: சென்னையில் நடைபெறவுள்ள இரு டெஸ்டுகள்!
கரோனா அச்சுறுத்தலால் பல நகரங்களில் தொடரை நடத்த முடியாத காரணத்தால்...
2021-ம் ஆண்டின் தொடக்கத்தில் இங்கிலாந்து அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்டுகள், 3 ஒருநாள், 5 டி20 ஆட்டங்களில் விளையாடவுள்ளது.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் பகலிரவு டெஸ்ட், பிப்ரவரி 24 அன்று ஆமதாபாத் மைதானத்தில் நடைபெறும் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறியுள்ளார். குஜராத் கிரிக்கெட் அகாடமியின் உள்ளூர் அரங்கத்தை இன்று திறந்து வைத்த ஜெய் ஷா கூறியதாவது: இந்தியா - இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட், பிப்ரவரி 7 அன்று தொடங்கும். பகலிரவு டெஸ்ட் ஆட்டம் ஆமதாபாத் மோடேரா மைதானத்தில் பிப்ரவரி 24 அன்று நடைபெறும். ஐந்து டி20 ஆட்டங்களும் மோடேரா மைதானத்தில் நடைபெறும் என்றார்.
உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக மோடேரா மைதானம் கட்டப்பட்டுள்ளது. இம்மைதானத்தில் 1 லட்சத்து 10 ஆயிரம் ரசிகர்கள் அமர முடியும்.
இந்நிலையில் கரோனா காரணமாக இந்தியா - இங்கிலாந்து தொடர் முழுக்க மூன்று நகரங்களில் மட்டுமே நடைபெறவுள்ளன. கரோனா பாதுகாப்பு வளையத்துக்குள் வீரர்கள் இருக்க வேண்டியிருப்பதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
டெஸ்ட் தொடர், சென்னை மற்றும் ஆமதாபாத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. இரு நகரங்களும் தலா இரு டெஸ்டுகளை நடத்தவுள்ளன. 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் முழுக்க ஆமதாபாத்தில் நடைபெறுகிறது. அதேபோல மூன்று ஒருநாள் ஆட்டங்களும் புணேவில் நடைபெறவுள்ளன.
முதல் டெஸ்ட் சென்னையில் பிப்ரவரி 7 அன்று தொடங்குகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடைசியாக 2016-ல் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் நடைபெற்றது. அதன்பிறகு இப்போதுதான் மீண்டும் டெஸ்ட் நடைபெறுகிறது. கரோனா அச்சுறுத்தலால் பல நகரங்களில் தொடரை நடத்த முடியாத காரணத்தால் சென்னைக்கு ஒரே தொடரில் இரு டெஸ்டுகள் கிடைத்துள்ளன.
இந்தியா - இங்கிலாந்து தொடர்களுக்கான அட்டவணையை பிசிசிஐ விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.