பாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் தொடர் திட்டமிட்டபடி நடைபெறுமா?: ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பதில்
இலங்கையில் ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் திட்டமிட்டப்படி...
இலங்கையில் ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் திட்டமிட்டப்படி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளும் இலங்கையில் மூன்று ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கின்றன. செப்டம்பர் 3 முதல் ஒருநாள் ஆட்டங்கள் ஹம்பன்டோட்டாவில் நடைபெறுகின்றன.
ஆப்கானிஸ்தானில் நிலவும் அசாதாரணமான சூழல் காரணமாக இந்தத் தொடர் நடைபெறுமா என்கிற கேள்வி எழுந்தது. இந்நிலையில் இந்தத் தொடர் நிச்சயம் நடைபெறும் என ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஹமித் ஷின்வாரி ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் விமானப் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தாலும் உரிய நேரத்தில் விமானம் கிடைத்த பிறகு ஆப்கானிஸ்தான் வீரர்கள் இலங்கைக்கு அனுப்பப்படவுள்ளார்கள். அதுவரை காபூலில் ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபடுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 20 வருடங்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தானில் கிரிக்கெட் வளர்ச்சிக்கு தலிபான்கள் முன்னுரிமை அளித்ததால் தற்போதைய அரசியல் சூழலால் கிரிக்கெட் செயல்பாடுகளுக்குப் பாதிப்பு நேராது என அறியப்படுகிறது. மேலும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் அலுவலகம் வழக்கம் போல இயங்கி வருகிறது. இந்த இரு காரணங்களாலும் இலங்கையில் நடைபெறவுள்ள ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் தொடருக்கு எவ்விதப் பாதிப்பும் நேராது எனக் கூறப்படுகிறது.