2021-ம் ஆண்டுக்கான சிறந்த டெஸ்ட் வீரருக்கான பரிந்துரைப் பட்டியலில் இந்தியாவின் ஆர். அஸ்வின் இடம்பெற்றுள்ளார்.
ஐசிசி விருதுகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இன்று முதல் பரிந்துரைப் பட்டியலை ஐசிசி வெளியிடுகிறது. மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் ஆடவர், மகளிருக்கான விருதுகள் அறிவிக்கப்படவுள்ளன.
2021-ம் ஆண்டுக்கான சிறந்த வீரர் (ஆடவர் மற்றும் மகளிர்), சிறந்த டெஸ்ட் வீரர் (ஆடவர் மற்றும் மகளிர்), சிறந்த ஒரு நாள் வீரர் (ஆடவர் மற்றும் மகளிர்), சிறந்த டி20 வீரர் (ஆடவர் மற்றும் மகளிர்), சிறந்த இளம் வீரர் (ஆடவர் மற்றும் மகளிர்), சிறந்த அசோசியேட் வீரர் (ஆடவர் மற்றும் மகளிர்), சிறந்த நன்னடத்தை விருது, சிறந்த நடுவருக்கான விருது ஆகிய விருதுகள் வழங்கப்படுகின்றன. ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை திறமையை சிறந்த அளவில் வெளிப்படுத்திய வீரர்கள் ஐசிசியின் பரிந்துரைப் பட்டியலில் இடம்பெறுவார்கள். கிரிக்கெட் நிபுணர்கள், ரசிகர்கள் ஆகியோரின் கருத்துகளின் அடிப்படையில் வெற்றியாளர் தேர்வு செய்யப்படுவார். ஜனவரி 17 முதல் 24 வரை ஒவ்வொரு பிரிவிலும் வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்.
சிறந்த டெஸ்ட் வீரருக்கான பரிந்துரைப் பட்டியல் இன்று வெளியாகியுள்ளது. ஆடவர் பிரிவில் இந்தியாவின் ஆர். அஸ்வின், நியூசிலாந்தின் கைல் ஜேமிசன், இலங்கையின் திமுத் கருணாரத்னே, இங்கிலாந்தின் ஜோ ரூட் ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள். 2021-ம் வருடம் 8 ஆட்டங்களில் 52 விக்கெட்டுகளும் ஒரு சதம் உள்பட 337 ரன்களும் அஸ்வின் எடுத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.