முகப்பு
செய்திகள்

சென்னை டெஸ்ட்: இங்கிலாந்து வீரர்கள் கருப்புப்பட்டை அணிந்து விளையாடுவது ஏன்?

சென்னை டெஸ்டில் பங்கேற்றுள்ள இங்கிலாந்து வீரர்கள் கருப்புப்பட்டை அணிந்து விளையாடுகிறார்கள்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:27 PM
பகிர்:

சென்னை டெஸ்டில் பங்கேற்றுள்ள இங்கிலாந்து வீரர்கள் கையில் கருப்புப்பட்டை அணிந்து விளையாடுகிறார்கள்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் இன்று தொடங்கியுள்ளது.

இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்ற கையோடு இந்தத் தொடரில் களமிறங்குகிறது. அதேநேரத்தில் இங்கிலாந்து அணி, இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்ற நிலையில் இந்திய அணியை எதிா்கொள்கிறது. இரு அணிகளுமே வலுவான வீரா்களைக் கொண்டுள்ளதால் இந்த டெஸ்ட் தொடா் மீது மிகுந்த எதிா்பாா்ப்பு நிலவுகிறது.

இந்நிலையில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் அஸ்வின், பும்ரா மீண்டும் இடம்பிடித்துள்ளார்கள். ஒரு டெஸ்ட் மட்டும் விளையாடியுள்ள வாஷிங்டன் சுந்தர், ஷபாஸ் நதீம் ஆகியோரும் இடம்பெற்றுள்ளார்கள். பும்ரா, கில், வாஷிங்டன் சுந்தர் ஆகிய மூவரும் இந்திய மண்ணில் முதல்முறையாக டெஸ்ட் விளையாடுகிறார்கள். இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் தனது 100-வது டெஸ்டை விளையாடுகிறார்.

இந்நிலையில் இந்த டெஸ்டில் இங்கிலாந்து வீரர்கள் கையில் கருப்புப்பட்டை அணிந்து விளையாடுகிறார்கள்.

இங்கிலாந்து ராணுவத்தில் பணியாற்றிய டாம் மூர், கரோனா தடுப்பு நடவடிக்கையில் உதவுவதற்காக பிரிட்டன் சுகாதாரத் துறைக்கு மில்லியன் பவுண்டுகளைத் திரட்டி தந்துள்ளார். பிறகு, கரோனாவால் பாதிக்கப்பட்ட டாம் மூர், கடந்த செவ்வாய் கிழமை மரணமடைந்தார். அவருடைய மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சென்னை டெஸ்டில் இங்கிலாந்து வீரர்கள் கருப்புப் பட்டை அணிந்து விளையாடுகிறார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.