இந்தியா - இலங்கை ஒருநாள், டி20 தொடர்கள்: புதிய அட்டவணை வெளியீடு
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள், டி20 தொடர்கள் 5 நாள்களுக்கு ஒத்திவைக்கப்பட்டு புதிய அட்டவணை...
இலங்கை அணியில் இருவருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள், டி20 தொடர்கள் 5 நாள்களுக்கு ஒத்திவைக்கப்பட்டு புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய அணி இலங்கைக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. அனைத்து ஆட்டங்களும் கொழும்பில் நடைபெறவுள்ளன. விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற முன்னணி வீரர்கள் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பங்கேற்பதால், இலங்கைக்கு எதிரான தொடர்களுக்கு ஷிகர் தவன் தலைமையிலான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. பயிற்சியாளராக முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்தில் இலங்கை அணிக்கு எதிராக விளையாடிய இங்கிலாந்து அணியில் மூன்று வீரர்கள் உள்பட ஏழு பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டார்கள். தொடரில் பங்கேற்ற அனைத்து இங்கிலாந்து வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.
இங்கிலாந்திலிருந்து இலங்கை அணி தனது சொந்த நாட்டுக்குத் திரும்பியுள்ளது. இலங்கையில் நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில் இலங்கை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட் பிளவர், டேட்டா அனலிஸ்ட் நிரோஷன் ஆகிய இருவரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இதனால் இங்கிலாந்திலிருந்து திரும்பிய இலங்கை வீரர்கள் அனைவரும் கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொழும்பு மற்றும் டம்புல்லாவில் இலங்கை அணிக்கான மாற்று வீரர்கள் இரு பிரிவாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். இலங்கையின் முதல் தேர்வு வீரர்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டாலும் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள், டி20 தொடர்கள் தடையேதுமில்லாமல் நடைபெறவேண்டும் என்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொழும்பில் உள்ள இலங்கை அணியின் மாற்று வீரர்களில் ஒருவருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இலங்கை அணியில் இருவருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் ஜூலை 13 அன்று தொடங்குவதாக இருந்த ஒருநாள் தொடர் 5 நாள்கள் கழித்து அதாவது ஜூலை 18 அன்று தொடங்குகிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. கூடுதலாக இரு நாள்களுக்கு இலங்கை வீரர்கள் தனிமைப்படுத்தப்படுவதால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஜூலை 18, 20, 23 ஆகிய தேதிகளில் ஒருநாள் தொடரும் ஜூலை 25, 27, 29 தேதிகளில் டி20 தொடரும் நடைபெறவுள்ளன.