ஷமி, இஷாந்த் மிரட்டல்: உணவு இடைவேளையில் நியூசிலாந்து 135/5
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தின் 5-வது நாள் உணவு இடைவேளையில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்துள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தின் 5-வது நாள் உணவு இடைவேளையில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் சௌதாம்ப்டனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 217 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
தொடர்ந்து, முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து அணி, 3-ம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 101 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் கேன் வில்லியம்சன் 12 ரன்களுடனும், ராஸ் டெய்லர் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
4-ம் நாள் ஆட்டம் மழையால் முற்றிலும் தடைபட்டது.
5-ம் நாள் ஆட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கியது. இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சால் நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்க சிரமப்பட்டனர். இந்த நெருக்கடியின் விளைவாக டெய்லர் 11 ரன்களுக்கு முகமது ஷமி பந்தில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய ஹென்ரி நிகோல்ஸை 7 ரன்களுக்கு இஷாந்த் சர்மா ஆட்டமிழக்கச் செய்தார். அடுத்த ஓவரிலேயே வாட்லிங்கை (1) போல்டாக்கி அசத்தினார் ஷமி.
இதன்பிறகு, வில்லியம்சனும், காலின் டி கிராண்ட்ஹோமும் உணவு இடைவேளை வரை தாக்குப்பிடித்தனர். 5-ம் நாள் உணவு இடைவேளையில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்ஸில் இன்னும் 82 ரன்கள் பின்தங்கியுள்ளது.