முகப்பு
செய்திகள்

அதிரடி.. அரைசதம்.. ஆட்டமிழப்பு: 329 ரன்கள் குவித்தது இந்தியா

​இங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி 48.2 ஓவர்களில் 329 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:52 PM
பகிர்:


இங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி 48.2 ஓவர்களில் 329 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் ஆட்டம் புணேவில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்திலும் டாஸ் வென்ற இங்கிலாந்து இந்த முறையும் இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தது. 

தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கிய ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவான் பெரிய ஸ்கோரை எட்ட வேண்டும் என்பதை மனதில் கொண்டு தொடக்கம் முதலே துரிதமாக ரன் சேர்த்து விளையாடினர். இதனால், இந்திய அணியின் ரன் ரேட் ஓவருக்கு 6.5 ரன்களுக்கு மேல் நீடித்து வந்தது. 14 ஓவர்களிலேயே விக்கெட் இழப்பின்றி 100 ரன்களை எட்டியது இந்திய அணி.

இந்த நிலையில் 15-வது ஓவரை வீசிய அடில் ரஷித் முதலில் ரோஹித் (37 ரன்கள்) விக்கெட்டை வீழ்த்தினார். அதற்கு அடுத்த ஓவரில் தவான் (67 ரன்கள்) விக்கெட்டையும் வீழ்த்தி இரட்டை அடி கொடுத்தார். இந்த சரிவிலிருந்து மீள்வதற்குள் கேப்டன் விராட் கோலி 7 ரன்களுக்கு மொயீன் அலி சுழலில் போல்டானார்.

எனினும், படிப்படியாக தனது பாணியிலான ஆட்டத்தைக் கையிலெடுக்கத் தொடங்கினார் ரிஷப் பந்த். ஆனால், சிறிது நேரம் மட்டுமே தாக்குப்பிடித்த கேஎல் ராகுல் பகுதி நேர பந்துவீச்சாளரான லியாம் லிவிங்ஸ்டன் பந்தில் 7 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

157 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி திணறியது. ஆனால், பந்துடன் இணைந்த ஹார்திக் பாண்டியா எவ்வித தயக்குமுமின்றி தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவரும் விக்கெட்டுகளை வீழ்த்திய சுழற்பந்துவீச்சாளர்களை குறிப்பாக விளாசினர். இதனால், இந்திய அணியின் ரன் ரேட் ஓவருக்கு 6.5-க்கு மேல் நீடித்து வந்தது. நெருக்கடியும் இங்கிலாந்து பக்கம் திரும்பியது.

ரஷித் சுழலில் சிக்ஸரைப் பறக்கவிட்ட பந்த் 45-வது பந்தில் மற்றுமொரு அரைசதத்தை எட்டினார். இதையடுத்து, பவர் பிளே ஓவர்களைப் பயன்படுத்தி அதிரடியாக ஆட இருவரும் முயற்சித்தனர். ஆனால், 36-வது ஓவரில் பந்த் 78 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இந்த இணை 5-வது விக்கெட்டுக்கு 99 ரன்கள் சேர்த்தது.

இதையடுத்து, பாண்டியா அதிரடிக்கான பொறுப்பை ஏற்றார். 36-வது பந்தில் அரைசதத்தை எட்டிய அவர் பெரிய ஸ்கோரை நோக்கி பொறுப்புடன் ஆடத் தொடங்கினார். ஆனால், அவரும் 39-வது ஓவரிலேயே 64 ரன்களுக்கு பென் ஸ்டோக்ஸ் பந்தில் தவறான நேரத்தில் போல்டானார்.

தொடர்ந்து களமிறங்கிய கிருணாள் பாண்டியா சரியான டைமிங் கிடைக்காமல் திணற, ஷர்துல் தாக்குர் சிக்ஸர்களாகப் பறக்கவிட்டு ரன் ரேட்டை 7-இல் நீடிக்கச் செய்தார். ஆனால், அவரும் 30 ரன்கள் (21 பந்துகள்) எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

டைமிங் இல்லாமல் திணறி வந்த கிருணாள் பாண்டியா ஒரு பவுண்டரிகூட அடிக்காமல் 25 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பிரசித் கிருஷ்ணா ரன் ஏதும் எடுக்காமலும், புவனேஷ்வர் 3 ரன்களுக்கும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க 50 ஓவர்கள் முடிவதற்குள் 329 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இந்தியா.

இங்கிலாந்து தரப்பில் மார்க் வுட் 3 விக்கெட்டுகளையும், அடில் ரஷித் 2 விக்கெட்டுகளையும், மொயீன் அலி, லியாம் லிவிங்ஸ்டன், சாம் கரன், பென் ஸ்டோக்ஸ், ரீஸ் டாப்லே ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.