முகப்பு
செய்திகள்

4-வது டெஸ்ட்: இந்திய அணி தடுமாற்றம், உணவு இடைவேளையில் 54/3

கோலி 18, ஜடேஜா 2 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். 

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:03 AM
பகிர்:

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்டில் இந்திய அணி முதல் நாள் உணவு இடைவேளையின்போது 3 விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் எடுத்துள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. 3 டெஸ்டுகள் முடிந்த நிலையில் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் உள்ளன. நான்காவது டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று தொடங்கியுள்ளது. 

டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் இஷாந்த் சர்மா, ஷமிக்குப் பதிலாக உமேஷ் யாதவ், ஷர்துல் தாக்குர் இடம்பெற்றுள்ளார்கள். இந்த டெஸ்டிலும் அஸ்வினுக்கு இடம் கிடைக்கவில்லை. இங்கிலாந்து அணியில் பட்லர், சாம் கரணுக்குப் பதிலாக போப், வோக்ஸ் இடம்பெற்றுள்ளார்கள். 

ரோஹித் சர்மாவும் ராகுலும் ஆரம்பத்தில் நன்கு விளையாடினார்கள். ஏழு ஓவர்களில் 28 ரன்கள் கிடைத்தன. வோக்ஸ் பந்துவீச வந்தபிறகு நிலைமை மாறியது. அற்புதமான பந்தில் ரோஹித் சர்மாவை 11 ரன்களில் வீழ்த்தினார் வோக்ஸ். இதன்பிறகு 17 ரன்களில் ராபின்சன் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார் ராகுல். இந்தத் தொடரில் அவ்வப்போது மட்டும் ரன்கள் எடுத்த புஜாரா இன்றும் ஏமாற்றினார். 4 ரன்களில் ஆண்டர்சன் பந்தில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு ரஹானேவுக்குப் பதிலாக ஜடேஜா களமிறங்கினார். இது நல்ல முடிவா என்பது இனிமேல்தான் தெரியவரும். 

உணவு இடைவேளையின்போது இந்திய அணி 25 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் எடுத்துள்ளது. கோலி 18, ஜடேஜா 2 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.