செய்திகள்

புதிய நெருக்கடி: ராவல்பிண்டி ஆடுகளத்துக்கு ஐசிசி கொடுத்த மதிப்பீடு!

DIN

பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் நடைபெற்ற ராவல்பிண்டி ஆடுகளத்துக்கு மதிப்பீடு வழங்கியுள்ளது ஐசிசி.

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் வரலாற்று வெற்றியை அடைந்தது இங்கிலாந்து அணி. 
 
பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்டுகளில் விளையாடுகிறது இங்கிலாந்து அணி. ராவல்பிண்டியில் நடைபெற்ற முதல் டெஸ்டில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 101 ஓவர்களில் 657 ரன்கள் எடுத்தது. ரன்ரேட் - 6.50. ஸாக் கிராவ்லி 122, பென் டக்கட் 107, ஆலி போப், ஹாரி புரூக் 153 ரன்கள் எடுத்தார்கள். பாகிஸ்தான் அணி 155.3 ஓவர்களில் 579 ரன்கள் எடுத்தது. அப்துல்லா ஷஃபிக் 114, இமாம் உல் ஹக் 121, கேப்டன் பாபர் ஆஸம் 136 ரன்கள் எடுத்தார்கள். இதனால் ஆட்டம் டிரா ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்ஸில் 35.5 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. ரன்ரேட் - 7.36. கிராவ்லி 50, ரூட் 73, ஹாரி புரூக் 87 ரன்கள் எடுத்தார்கள். இதையடுத்து பாகிஸ்தான் அணிக்கு 343 ரன்கள் இலக்கு அளிக்கப்பட்டது. டிரா ஆகும் நிலைக்குச் சென்ற டெஸ்டை, டிக்ளேர் செய்ததன் மூலம் பரபரப்பு நிலைக்குக் கொண்டு சென்றார் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ். சவாலை ஓரளவு எதிர்கொண்ட பாகிஸ்தானால் கடைசி நாளில் இங்கிலாந்தின் பந்துவீச்சுக்கும் ஸ்டோக்ஸின் புத்திசாலித்தனக்கும் ஈடுகொடுக்க முடியவில்லை. 96.3 ஓவர்களில் 268 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஷகீல் அதிகபட்சமாக 76 ரன்கள் எடுத்தார். ஆலி ராபின்சன், ஆண்டர்சன் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்திக் கடைசி நாளில் அசத்தினார்கள். ஆட்ட நாயகன் விருது ஆலி ராபின்சனுக்கு வழங்கப்பட்டது. 2-வது டெஸ்டையும் வென்று டெஸ்ட் தொடரை வென்றுள்ளது இங்கிலாந்து அணி. 

பேட்டிங்குக்குச் சாதகமாக இருந்ததால் ராவல்பிண்டி ஆடுகளம் அதிக விமர்சனங்களை எதிர்கொண்டது. இந்நிலையில் இந்த ஆடுகளத்துக்குச் சராசரிக்கும் கீழே என மதிப்பீடு செய்துள்ளது ஐசிசி. ராவல்பிண்டி ஆடுகளம் இதுபோன்ற மதிப்பீட்டைப் பெறுவது 2-வது முறை. கடந்த மார்ச் மாதம் பாகிஸ்தானும் ஆஸ்திரேலியாவும் மோதிய டெஸ்டில் 1187 ரன்கள் குவிக்கப்பட்டன. 5 நாள்களில் 14 விக்கெட்டுகள் மட்டுமே கிடைத்தன. அந்த ஆடுகளமும் சராரிக்கும் கீழே என்கிற மதிப்பீட்டைப் பெற்றது.

இந்த ஆடுகளம் எந்தப் பந்துவீச்சாளருக்கும் உதவவில்லை. இதனால் தான் இரு அணி பேட்டர்களும் விரைவாக ரன்கள் எடுத்தார்கள். நாள் செல்லச் செல்ல பந்துவீச்சுக்குச் சாதகமாக ஆடுகளம் மாறவில்லை. இதனால் தான் இந்த மதிப்பீடு வழங்கப்பட்டுள்ளது என ஐசிசி நடுவர் ஆண்டி பைகிராஃப்ட் தெரிவித்துள்ளார். இதையடுத்து ராவல்பிண்டி ஆடுகளம் இரு அபராதப் புள்ளிகளைப் பெற்றுள்ளது. மேலும் கூடுதல் அபராதப் புள்ளிகளை இனிமேல் பெற்றால் சர்வதேச ஆட்டங்களை நடத்த தடை விதிக்கப்படும் அபாயத்தில் உள்ளது. ஒரு கிரிக்கெட் மைதானம் 5 வருடங்களுக்குள் 5 அபராதப் புள்ளிகளைப் பெற்றால் ஒரு வருடத்துக்கு எவ்வித சர்வதேச ஆட்டத்தையும் நடத்த தடை விதிக்கப்படும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊராட்சி மன்றத் தலைவியின் வீட்டில் நகைகள் திருட்டு

சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரிப்பு: வாலிநோக்கம் கடற்கரையில் அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரிக்கை

ராமேசுவரம், திருவாடானையில் பலத்த மழை

அனுமதியின்றி மாட்டு வண்டிப் பந்தயம், மஞ்சுவிரட்டு : 10 போ் மீது வழக்கு

66 கட்டடங்களை அப்புறப்படுத்த குறிப்பாணை

SCROLL FOR NEXT